மும்பை: எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் வீட்டு கடன் வட்டியை 2 விழுக்காடு குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி டிசம்பர் 17 ஆம் தேதி முதல் கணக்கிடப்படும்.
இந்திய ஆயுள் காப்பீடு கழகத்தின் துணை நிறுவனமான எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் ரூ.20 லட்சத்திற்குள் இருக்கும், ஐந்து வருட தவணை கடனுக்கான வீட்டு கடனுக்கான வட்டியை 9.25 விழுக்காடாக குறைத்துள்ளது.
ஐந்து வருடங்களுக்கும் அதிக கால தவணைக்கான கடனுக்கான வட்டியை 9.75 விழுக்காடாக குறைத்துள்ளது.
இதே போல் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு கடனுக்கான வட்டி, கடன் வாங்கியவர்களின் பிரிவை பொறுத்து 11 முதல் 11.25 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் எல்லா கடனுக்கும் 11.5 விழுக்காடு வட்டி வசூலித்தது.
இது குறித்து எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.ஆர்.நாயர் கூறுகையில், தேசிய வீட்டு வசதி வங்கியிடம் இருந்து, மறு நிதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணத்தை பெறுவோம். இதனால் நாங்கள் வீட்டு கடன் கொடுக்க திரட்டும் நிதிக்கான வட்டி குறையும் என்று தெரிவித்தார்.
வர்த்தக வங்கிகள், நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் கொடுக்கும் வீட்டு வசதி கடனில் ஒரு பகுதியை, தேசிய வீட்டு வசதி வங்கி திருப்பி கொடுக்கிறது. இதன் வட்டி, மற்ற வகையில் நிதி திரட்ட கொடுக்கும் வட்டியை விட குறைவாக இருக்கும்.