கோவை: சிறு, குறுந் தொழில்களுக்கு வங்கிகள் அறிவித்துள்ள வட்டி குறைப்பு ஏமாற்றத்தை தருவதாக இந்திய தொழில் வர்த்தக சபை அதிருப்தி தெரிவித்துள்ளது.
வர்த்தக சபையின் கோவை பிரிவு தலைவர் மகேந்திர ராம்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத் துறை வங்கிகள், குறுந்தொழில்களுக்கு 1 விழுக்காடும், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு அரை விழுக்காடு வட்டியைக் குறைப்பதாக அறிவித்துள்ளன.
பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி பொதுத் துறை வங்கிகளுக்கு வழங்கும் வட்டி, குறைந்தபட்ச கையிருப்பு போன்றவற்றில் பல்வேறு சலுகைகளை அளித்தது. இது நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுபடுத்துவதற்கும், வங்கிக் கடனுக்கான வட்டியைக் குறைப்பதற்கும் அறிகுறிகளாக இருந்தன.
இருப்பினும் தற்போது கடன்களுக்கான வட்டி எதிர்பார்த்த அளவுக்கு குறைக்கவில்லை. தொழில், வியாபாரத்துக்கு கடன் கொடுப்பதைத் தவிர்த்து, பொதுத் துறை வங்கிகள், ரிசர்வ் வங்கியின் வசம் நாளொன்றுக்கு ரூ.38 ஆயிரம் கோடியை ஒப்படைக்கின்றன.
அரசு சலுகைகளை அறிவித்தாலும், வங்கிகளின் மாறுதலை விரும்பாத அணுகுமுறையால் தொழில் துறைக்கு எந்த பலனும் கிடையாது. உயர் வட்டி, கடனைத் திரும்பச் செலுத்தும் தொகை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக ஜவுளி, ரியல் எஸ்டேட், கட்டுமானம், சில்லரை விற்பனை துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுத் துறை வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டியை குறைந்தபட்சம் 3 விழுக்காடாக குறைக்க வேண்டும்.
கடன் திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடுவை மாற்றியமைப்பது, கடன் மற்றும் மூலப் பொருள்களுக்கான தொகைகளை தொழில் வளர்ச்சிக்காக அளிப்பது உள்ளிட்ட இந்திய வங்கி குழுமம் தெரிவித்துள்ள அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை. இதை அனைத்து பொதுத் துறை வங்கிகளும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.