கொல்கத்தா: இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.5 முதல் 8 விழுக்காடாக குறைவதுடன், அடுத்த ஆண்டு மேலும் சிக்கலானதாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் டி.சுப்பாராவ் கூறினார்.
கொல்கத்தாவில் ரிசர்வ் வங்கி இயக்குநர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ், மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்யாவை சந்தித்து பேசினார்.
அதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது உள்ள சூழ்நிலையின் படி, உள்நாட்டு மொத்த உற்பத்தி அளவு (பொருளாதார வளர்ச்சி) குறையும். இது பற்றி ரிசர்வ் வங்கி ஜனவரி மாதம் வெளியிடும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்படும். அடுத்த நிதி ஆண்டு (2009-10) மிகுந்த சிரமம் மிகுந்த ஆண்டாக இருக்கும்.
சர்வதேச நிதியம், உலக அளவிலான வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டை குறைத்துள்ளது. அதே போல் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்று வரும் நாடுகளின் வளர்ச்சியும் குறையும் என்று மதிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி, ஜனவரி மாதம் வெளியிடும் பொருளாதார ஆய்வறிக்கையில், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி பற்றிய மாற்றி அமைக்கப்பட்ட மதிப்பீடு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
சர்வதேச நிதியம் இந்த ஆண்டு உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 3 விழுக்காடாக இருக்கும் என்று கூறியிருந்தது. தற்போது 2.2 விழுக்காடாக குறையும் என்று அறிவித்துள்ளது.
சென்ற அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கி பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடும் போது, இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.5 முதல் எட்டு விழுக்காடாக குறையும் என்று அறிவித்தது.
தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பற்றிய ரிசர்வ் வங்கியின் மதிப்பீடு, வருகின்ற ஜனவரி 27 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள ஆய்வறிக்கையில் அறிவிக்கப்படும்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவும், இந்த நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 7.7 விழுக்காடாக இருக்கும் என்று அறிவித்து உள்ளது. இதுவும் இதன் மதிப்பீட்டை மாற்றும் என்று தெரிகிறது.
மத்திய அரசு அதிகார பூர்வமாக அறிவித்த கணக்குப்படி, இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் பொருளாதார வளர்ச்சி 7.8 விழுக்காடாக இருப்பதாக கூறியுள்ளது.
சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 9.3 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.