காஞ்சிபுரம்: அரிசி விலை பற்றிய பட்டியலை மாதந்தோறும் வெளியிட காஞ்சிபுரம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.
இது குறித்து சங்கத் தலைவர் மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது.
தமிழகத்தில் தொடர் மின்வெட்டால் அரிசி ஆலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் அரிசி ஆலைகளில் உற்பத்தி குறைந்து, விலை அதிகரித்தது. அரிசி ஆலைகளில் 40 விழுக்காடு உற்பத்தி குறைந்தது.
தமிழக முதல்வர், உணவுத் துறை அமைச்சருடன் சென்ற மாதம் 25 ஆம் தேதி சங்க நிர்வாகிகள் கலந்து பேசினர்.
அப்போது உயர்ரக வெள்ளை பொன்னி அரிசி விலையேற்றம் குறித்தும் விவாதிக்கப் பட்டது.
தமிழக அரசு, அரிசி ஆலைகளுக்கு மின் வெட்டில் இருந்து விலக்கு அளித்து தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதனால் அரிசி ஆலைகளில் மீண்டும் உற்பத்தி அதிகரிக்கும்.
அத்துடன தற்போது பெய்த தொடர் மழையால், வெளிமாநிலங்களில் இருந்து நெல்வரத்து அதிகரித்து உள்ளது . இதனால் அரிசி விலை கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை குறைய வாய்ப்பு உள்ளது.
தமிழக அரசின் அறிவுறுத்தல்படி, இனி மாதந்தோறும் அரிசி விலைப்பட்டியல் வெளியிடப்படும்.
காஞ்சிபுரம் அரிசி ஆலைகள் அனைத்தும் நவீனப்படுத்தப்பட்டு விட்டன. காற்றில் உமி கலக்காதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.