மடிகிரி. கர்நாடகா: கர்நாடாக மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் மிளகு, காபி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடாகாவில் குடகு மாவட்டத்தில் காபி. மிளகு தோட்டங்கள் அதிக அளவு உள்ளன. இந்த மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் மாலையிலும், இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த மழை, இந்த வருடம் காபி, மிளகு விளைச்சல் அதிகமாக இருக்கும். நல்ல வருவாய் கிடைக்கும் என்று ஆசையுடன் காத்திருந்த விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினசரி பெய்து வரும் மழையால் காபி செடிகளில் இருந்து காபி விதைகள் கீழே கொட்டி ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே பிப்ரவரி, மார்ச் மாதத்தில் பெய்த மழையால், காபி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது பெய்து வரும் மழை, மேலும் அதிக அளவு சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள அராபிகா ரக காபி கொட்டையின் நிறம் மாற துவங்கிவிட்டது. இதனால் விவசாயிகள் முழு அளவு வளராத காபி கொட்டைகளை, செடிகளில் இருந்து பறித்து வருகின்றனர். அத்துடன் இவற்றை காய வைக்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.
முர்நாட் என்ற ஊரில் உள்ள காபி பயிர்செய்யும் விவசாயி, செங்கப்பா கூறுகையில், காபி கொட்டையை காய வைக்காமல் ஈரமாக வைக்க முடியாது. இவ்வாறு வைத்தால் அழுகிப் போய்விடும் என்று கவலையுடன் தெரிவித்தார்.
மற்றொரு விவசாயி சுரேஷ் கூறுகையில், காபி கொட்டையை காய வைக்காமலேயே கிலோ ரூ.15 முதல் ரூ.17 வரை விற்பனை செய்ததாக தெரிவித்தார். இதை காய வைத்து விற்பனை செய்திருந்தால் இரண்டு மடங்கு விலை கிடைத்திருக்கும் என்று தெரிவித்தார்.
இது குடகு மாவட்டத்தில் மழை காலம் அல்ல. இந்த வருடம் திடீரென மழை பெய்துவருகிறது. இந்த மழையால் காபி, மிளகு உட்பட மற்ற பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதியில் வாழும் முதியவர் மகாதேவன் கூறுகையில், குடிநீருக்காவும், விவசாயத்திற்கும் காவிரி ஆற்று நீரை நம்பி உள்ளவர்கள் மட்டுமே, இந்த மழையால் பயன் அடைவார்கள். குடகு மாவட்டத்தில் தான் காவிரி உற்பத்தியாகிறது. இங்குள்ளவர்கள் காவிரி ஆற்றை நம்பி இல்லை என்று தெரிவித்தார்.
இந்தியாவிலேயே அதிக அளவு காபி குடகு மாவட்டத்தில் தான் உற்பத்தியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.