சிங்கூர்: டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலையை திறக்க கோரி சிங்கூரில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் துவங்கியது.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா மோட்டார் நிறுவனம் நானோ ரக கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைத்து வருகிறது.
இந்த தொழிற்சாலைக்கு கையகப்படுத்திய விவசாய நிலத்தில் 300 ஏக்கர், விவசாயிகளுக்கே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், 30 க்கும் மேற்பட்ட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதனிடையே நேற்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கும், டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவுக்கும் இடையே, இந்த தொழிற்சாலையை மீண்டும் இயங்க செய்ய பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரத்தன் டாடா, சிங்கூரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
டாடா நிறுவனம் வெளியேற கூடாது எனவும், நானோ கார் தொழிற்சாலையை மீண்டும் இயங்க வேண்டும் என்று கூறி, மேற்கு வங்கத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தது.
இந்த போராட்டம் இன்று காலை துவங்கியது. டாடா நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்கள், மீண்டும் தொழிற்சாலையை திறக்க கோரி, துர்காபூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் துவங்கியுள்ளனர்.
இந்த முழு கடை அடைப்பு போராட்டத்தால், நானோ கார் தொழிற்சாலை அமைந்துள்ள துர்காபூர் தேசிய நெடுச்சாலையில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. எந்த நேரமும் வாகனங்கள் செல்லும் சாலை வெறிச்சோடி கிடந்தது.
இந்த போராட்டத்தில் திரளான பெண்களும் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சாலை மறியல் நடத்தியதுடன், டயர்களையும் எரித்தனர். கார் தொழிற்சாலையை எதிர்க்கும் அமைப்புகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இங்கு நிலைமை பதட்டமாக இருப்பதாகவும், ஆனால் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.