தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோசனை வழங்க “இ-கிளப்” அமைக்கப்பட்டுள்ளது.
கோவை எம்.எஸ்.எம்.இ. மையத்தில் நேற்று மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி மைய (எம்.எஸ்.எம்.இ.) இயக்குநர் எஸ்.சிவஞானம் இ-கிளப்பை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், சிறுதொழில் நிறுவனங்கள் புதுமைகளை புகுத்தினால்தான் நிலைத்து நிற்க முடியும்.
தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் "இ-கிளப்' உருவாக்கப்பட்டுள்ளது. இ-கிளப் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் நாடு முழுவதும் 5 பல்கலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் ஒரு பல்கலைக்கழகமாக வேலூர் வி.ஐ.டி. பல்கலை. தேர்வு செய்யப்பட்டுள்ளது. இ-கிளப் உறுப்பினர்கள், தங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை மின்னஞ்சல் வாயிலாக பல்கலைக்குத் தொடர்புகொண்டு தேவையான தகவல்களைப் பெறலாம்.
தமிழகத்தில் ஆண்டுக்கு 240 இ-கிளப்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில்நிறுவனங்களுக்குத் தேவையான விபரங்கள் குறித்து இ-கிளப் மூலம் அரசுக்கு பரிந்துரைக்கலாம்.
தற்போது மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப சிறுதொழில்நிறுவனங்கள் புதுமைகளை புகுத்த வேண்டும். அப்போதுதான் சந்தையில் நிலைத்து நிற்க முடியும். சிறுதொழில் நிறுவன உரிமையாளர்கள் அவ்வப்போது சந்தித்து கொண்டு கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். இந்த மாதிரியான கருத்துப்பரிமாற்றத்தால் தொழில் வளர்ச்சி ஏற்படும்.
இந்த கூட்டத்தில் எம்.எஸ்.எம்.இ. துணை இயக்குநர்கள் ஆர்.பன்னீர்செல்வம், எம்.பழனிவேல், உதவி இயக்குநர் (இயந்திரவியல்) வெ.ராமகிருஷ்ணன், கொடிசியா முன்னாள் தலைவர் டி.ஜெயகோபால், கோவை இ-கிளப் தலைவர் என்.எஸ்.குமார், வி.ஐ.டி. பல்கலை. இ-கிளப் ஒருங்கிணைப்பாளர் முரளி மனோகர், பேராசிரியர் ரிச்சர்ட் ரெஜிஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.