ஜூலை மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 7.06% ஆக இருந்தது. (இது சென்ற வருடம் ஜூலை மாதத்தில் 8.28% ஆக இருந்தது).
இந்த நிதி ஆண்டில் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும் போது, ஜூலை மாதத்தில் தொழில் துறை உற்பத்தி அதிகரித்துள்ளது.
தற்போது பல்வேறு பொருட்களின் விற்பனை மந்தமாக உள்ளது. அதே நேரத்தில் கச்சாப் பொருட்களின் விலையும் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலைகளிலும் இந்த வருடம் தொழில் துறை உற்பத்தி 6% முதல் 7% என்ற அளவில் இருக்கும்.
மொத்த விலை பட்டியலை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும் பணவீக்கம், ஆகஸ்ட் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12.10% இருந்தது. கடந்த மூன்று வாரங்களாக பணவீக்கம் குறைந்து வருவதற்கு முக்கிய காரணம், உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் விலைகள் குறைந்து வருவதே.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இதன் விலை உள்நாட்டில் குறைய சிறிது நாட்களாகும். ஏனெலில் பெட்ரோல், சமையல் எரிவாயு, மண் எண்ணெய் விலைகள் அரசு கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
மற்றொருபுறம் இரும்பு தாது போன்ற உலோக தாது பொருட்களின் விலை அதிகரிக்கின்றன. இதனால் உலோகங்களின் விலை அதிகமாக இருக்கிறது. இது போன்ற காரணங்களினால் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 12.00% முதல் 12.20% என்ற அளவில் இருக்கும்.
ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கை பலனை கொடுத்துள்ளன. ஆகஸ்ட் 1 ஆம் தேதி 21.02% ஆக இருந்த பணப்புழக்கம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிலவரப்படி 20.74% ஆக குறைந்தது. இதை இந்த நிதி ஆண்டிற்குள் 16.5%-17% ஆக குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், பணவீக்க அளவு கோளில் உள்ள தொழில் துறைக்கு தேவையான பெட்ரோலிய பொருட்களின் விலை குறையும். இதனால் பணவீக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கையை தொடர்நது மேற்கொள்ளும். இதனால் 15 முதல் 91 நாட்களுக்கான கடன் பத்திரங்களின் வருவாய் செப்டம்பர் மாதத்தில் 8.70% முதல் 8.90% ஆக இருக்கும்.
அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. 1 டாலரின் மதிப்பு ரூ.45 ஐ விட அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி 1 டாலரின் மதிப்பு ரூ.42.37 ஆக இருந்தது. இது செப்டம்பர் 12 ஆம் தேதி நிலவரப்படி 45.77 ஆக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ரூபாயின் மதிப்பு சுமார் 8% குறைந்துள்ளது. டாலரின் தேவை அதிகரித்து வருவதாலும், அந்நிய செலவாணி சந்தையில் டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால், செப்டம்பர் மாதத்தில் 1 டாலரின் மதிப்பு ரூ.45.20-ரூ.45.50 என்ற அளவில் இருக்கும்.
ஆதாரம் - Dun&Bradstreet’s Economy Forecast.