டாடா மோட்டார் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி, நானோ ரக கார்களை அடுத்த மாதம் விற்பனைக்குக் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி முதல்கட்டமாக ஆயிரம் கார்கள் டாடா நிறுவனத்தின் புனே ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
நானோ கார்களுக்குத் தேவையான அனைத்து உதிரி பாகங்களையும் புனே ஆலைக்கு அனுப்பியிருப்பதாக உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
டாடா மோட்டார் நிறுவனம் உலகிலேயே மிகவும் விலை குறைந்த காரை அறிமுகப்படுத்துகிறது. இதன் விலை ரூ.1 லட்சம் என அறிவித்துள்ளது.
புது டெல்லியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற வாகன வர்த்தக கண்காட்சியில், நானோ காரை டாடா மோட்டார் நிறுவனத்தின் சேர்மன் ரத்தன் டாடா அறிமுகப்படுத்தினார்.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் இந்த கார் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இந்த கார் தொழிற்சாலைக்காக விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தியதை திரும்ப வழங்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த பிரச்சனையில் இது வரை எவ்வித இறுதி தீர்வும் ஏற்படவில்லை.
இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி, துர்கா பூஜையின்போது நானோ கார் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. புனே தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.