பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.
உலக சந்தையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதற்கு முன் இல்லாத அளவிற்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 140 டாலர் என்ற அளவிற்கு அதிகரித்தது.
இதன் விலை கடந்த ஒரு மாதமாக குறைந்தது. இன்றைய நிலவரப்படி ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் 1 பீப்பாய் 116 டாலராக உள்ளது.
பெட்ரோலிய நிறுவனங்கள் விமானங்களுக்கான பெட்ரோல் விலையை 16 விழுக்காடு குறைத்துள்ளன.
இதேபோல் பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், பெட்ரோலிய நிறுவனங்கள் தினசரி இழப்பை சந்தித்து வருகின்றன.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தும் கூட, தினசரி பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது என்று முரளி தியோரா தெரிவித்தார்.
மத்திய பெட்ரோலிய துறை செயலாளர் ஆர்.எஸ்.பாண்டே கூறுகையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணென்ணெய் விற்பனையில் பெட்ரோலிய நிறுவனங்கள் தினசரி இழப்பை சந்தித்து வருகின்றன. இவற்றின் விலையை குறைக்கும் அளவிற்கு, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையவில்லை என்று கூறினார்.
இந்தியா வாங்கும் கச்சா எண்ணய் விலை இந்த மாதம் (ஆகஸ்ட்) முதல் வாரத்தில் 117.37 டாலராக இருந்தது.
இது இரண்டாவது வாரத்தில் 111.09 டாலராக குறைந்தது.
இரண்டாவது வாரத்தில் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பார்த்தால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.6.31, 1 லிட்டர் டீசலுக்கு ரூ.13.39, 1 லிட்டர் மண்எண்ணெய்க்கு ரூ.31.69, சமையல் கியாஸ் சிலின்டருக்கு ரூ.312.58 இழப்பை சந்தித்து வருகின்றன.
பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை, மத்திய அரசு ஆயில் பாண்ட் எனப்படும் கடன் பத்திரங்கள், ஓ.என்.ஜி.சி. போன்ற நிறுவனங்களின் நிதி உதவி மூலம் ஈடுசெய்யப்படுகின்றன.