சிங்கூரில் டாடா கார் தொழிற்சாலையில் இரண்டாவது நாளாக எவ்வித வேலையும் நடைபெறவில்லை.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா மோட்டர் நிறுவனம், நானோ ரக கார்களை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இந்த தொழிற்சாலை அமைக்க விவசாயிகளிடம் இருந்து 400 ஏக்கர் நிலம் பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ளது என்று மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் கட்சி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலத்தை விவசாயிகளுக்கு திருப்பி வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்த திரணாமுல் காங்கிரஸ் கடந்த ஏழு நாளாத தர்ணா போராட்டம் நடத்துகிறது.
இதனால் டாடா கார் தொழிற்சாலையில் இரண்டாவது நாளாக இன்றும் எவ்வித பணியும் நடக்கவில்லை.
இது குறித்து டாடா கார் தொழிற்சாலை அதிகாரிகள் கூறுகையில், பணிகள் தொடங்குவதற்கான சூழ்நிலை இல்லை. நிலைமையை கவனித்து வருகின்றோம் என்று தெரிவித்தனர்.
இந்த கார் தொழிற்சாலை அமைந்துள்ள துர்காபூர் தேசிய நெடுஞ்சாலையில், போராட்டம் நடைபெறுவதால் போக்குவரத்து நின்று போயுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பை நீக்கும் படி கொல்கத்தை உயர்நீதி மன்றத்தில் நேற்று வழக்கு தொடங்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், மாநில காவல்துறை உதவியுடன், இந்த சாலையில் போக்குவரத்தை சீர்படுத்தும்படி தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.