Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பருத்தி விலை உயர்வு: சைமா எதிர்ப்பு!

பருத்தி விலை உயர்வு: சைமா எதிர்ப்பு!
, வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (16:34 IST)
பருத்தி கொள்முதல் விலை உயர்த்துவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தென் இந்திய ஜவுளி ஆலை அதிபர்கள் சங்கம் (சைமா) கேட்டுக் கொண்டுள்ளது.

விவசாயிகளிடம் இருந்து வாங்கும் பருத்தியின் குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தி இருப்பது விவசாயிகளுக்கும், ஜவுளித் துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சைமா தலைவர் கே.வி.ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு நடுத்தர இழை ரக பருத்தியின் விலையை 38% உயர்த்தி குவிண்டாலுக்கு ரூ.2,200 ஆக அதிகரிக்க உள்ளது (பழைய விலை ரூ.1,800).

நீண்ட இழை பருத்தியின் விலையை குவின்டாலுக்கு 47% அதிகரித்து ரூ.3 ஆயிரம் (பழைய விலை ரூ.2,030) ஆக உயர்த்தி உள்ளது.

உலக சந்தையில், இந்த விலை உயர்வால் இந்திய ஜவுளி நிறுவனங்கள் போட்டியிட இயலாது. இதனால் ஜவுளி துறையைச் சேர்ந்த தொழில்கள் நசுங்கி போயிவிடும்.

ஜவுளி தொழில் ஏற்கனவே பருத்தி விலை உயர்வு, வங்கி வட்டி இருமடங்காக அதிகரிப்பு, மின் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த பருத்தி பருவத்திலாவது சமாளித்து பழைய நிலைக்கு திரும்பலாம் என்ற சூழ்நிலையில், தற்போதைய விலை உயர்வு ஜவுளி துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஜவுளி தொழில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்த மாதிரியான நிலைமையில் தொழிலை தொடர்ந்து நடத்துவது மிக சிரமம். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால், ஜவுளி ஆலைகள் மூடும் அபாயம் ஏற்படும். இதனால் லட்சக்கணக்கானோர் வேலை இழப்பார்கள்.

தற்போது பருத்தி விலையை உயர்த்துவதால், விவசாயிகளுக்கு குறுகிய காலத்திற்கு பயன் அளிக்கலாம். உள்நாட்டில் பருத்தியின் தேவை குறைவதால் நீண்ட கால நோக்கில் பாதிப்பையே ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil