இந்தியாவின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்டிரிஸ், மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயருமானால் தனது உற்பத்திப் பொருட்களின் விலைகளை உயர்த்த முடிவு செய்துள்ளது.
கோதுமை, பால், சமையல் எண்ணெயின் விலைகளில் உயர்வு காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரிட்டானியா நிறுவனம் சுமார் 8 முதல் 12 விழுக்காடு வரை விலையை உயர்த்தியது.
குறைந்த லாபம் கிடைத்த போதிலும், இந்த விலைகளையே தொடர்ந்து கடைபிடிக்க தங்கள் நிறுவனம் விரும்புவதாகவும், ஆனால் தொடர்ந்து மூலப்பொருட்கள் விலை உயருமானால் மீண்டும் விலைகளை உயர்த்தாமல் இருக்க முடியாது என்றும் பிரிட்டானியா விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் நீரஜ் சந்திரா தெரிவித்துள்ளார்.
நியூட்ரி சாய்ஸ்5 என்ற புதுவகை பிஸ்கட் அறிமுக நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களின் விலையில் சராசரியாக 20 விழுக்காடு அளவுக்கு உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு கோதுமை உற்பத்தி சாதனை அளவுக்கு இருப்பதால் விலையில் நிலைத் தன்மை இருப்பதாலும், சமையல் எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்து தற்போது ஓரளவு குறைந்திருப்பதாலும், உற்பத்திப் பொருட்களின் விலையில் உடனடி உயர்வு இல்லை என்று நீரஜ் தெரிவித்தார்.
சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சியடைந்திருப்பதாலும், கடந்த ஜூலை மாதம் முதல் சர்க்கரையின் விலையில் 25 விழுக்காடு உயர்வு காணப்படுவதாலும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் சர்க்கரையை கொண்டு செல்லும் செலவு அதிகரித்திருப்பதாலும் பிஸ்கட் பொருட்களின் உற்பத்தியில் சற்றே பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
7 ஆண்டுகளாக ஒரே விலையில் நீடித்த பிஸ்கட், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே உயர்வைச் சந்தித்ததாக நீரஜ் குறிப்பிட்டார்.
பிரிட்டானியா நிறுவனம் கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த முதலாவது காலாண்டில் நிகர லாபமாக 40 கோடியே 30 லட்சம் ரூபாயை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலத்தை விடவும் 11.63 விழுக்காடு அதிகமாகும். அதேபோல் நிகர விற்பனை 20 விழுக்காடு அளவுக்கு உயர்ந்து ரூ. 693 கோடியை எட்டியுள்ளது.