பழங்கள், காய்கறிகள், பால் ஆகிய அத்யாவசியப் பொருட்கள் மட்டுமின்றி, பருத்தி, நூலிழை, சிமெண்ட் ஆகியவற்றின் விலை உயர்வால் ரூபாயின் பணவீக்கம் ஆகஸ்ட் 9ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 12.63 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 2ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 12.44 விழுக்காடாக இருந்த பணவீக்கம், உணவுப் பொருட்களுக்கான மொத்த விலைக் குறியீட்டை உயர்த்தியதன் காரணமாக ரூபாயின் பணவீக்கம் ஒரு வார காலத்தில் 0.19 விழுக்காடு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே வாரத்தில் பணவீக்கம் 4.24 விழுக்காடாக இருந்தது. ஒட்டுமொத்தமாக பணவீக்கம் 12.63 விழுக்காடாக இருந்தாலும் மொத்த விலைக் குறியீட்டுப் பட்டியலில் உள்ள 30 அத்யாவசியப் பொருட்களின் விலை உயர்வு 5.7 முதல் 6.7 விழுக்காட்டிற்குள்தான் கடந்த 19 வாரங்களாக இருந்துவருகிறது என மத்திய நிதி அமைச்சக அறிக்கை கூறுகிறது.
இந்த வாரத்தில் பணவீக்கத்தை பழங்கள், காய்கறிகள் ஆகியன மட்டுமின்றி, தேயிலை, பருப்பு வகைகள், கடுகு எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வும், பருத்தி நூலின் விலை 8 விழுக்காடும், பாலியஸ்டர் நூலிழை விலை 7 விழுக்காடு உயர்ந்ததும் காரணம் என்று அவ்வறிக்கை கூறுகிறது.
உணவு எண்ணெய்கள், கடல் மீன், முட்டை, ஆட்டுக்கறி ஆகியவற்றின் விலைகள் குறைந்துள்ளன.