பங்குச் சந்தையில் பிராவிடன்ட் பண்ட் (பி.எப்) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 15 விழுக்காடு வரை முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது வரை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை, (பி.எப்) பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே நிர்வகித்து வந்தது. கடந்த மாதம் பி.எப் நிதியை நிர்வகிக்க மூன்று தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது.
மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் தொழிலாளர் நல நிதி, ஓய்வுதிய நிதி (பென்ஷன் பண்ட்), பணி முதிர்வு கால நிதி (கிராஷிவிட்டி பண்ட்) ஆகியவற்றில் சேரும் நிதியில் 15 விழுக்காடு வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.
இந்த நிதியை மும்பை, தேசிய பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யலாம்.
இந்த உத்தரவு அடுத்த நிதி ஆண்டில் இருந்து பொருந்தும் (2009-ஏப்ரல் 1) என கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த வருடம் தொழிலாளர் வருங்கால நிதி உள்ளிட்ட, வருங்கால சேமிப்பு நிதிகளை, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி வழங்குவதற்கான ஆலோசனைகளை வெளியிட்டது. இது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்தை கேட்டது. இந்த கருத்துக்களின் அடிப்படையில், தற்போது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது பி.எப் நிதி கணக்கில் சுமார் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடி உள்ளது. இதில் 15 விழுக்காடு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஜீலை மாதம் 30 ஆம் தேதி ஹாங்காய் சாங்காய் பாங்கிங் கார்ப்பரேஷன்(ஹெச்.எஸ்.பி.சி), ரிலையன்ஸ் கேப்பிடல், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்டல் ஆகிய தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கும் பி.எப் நிதியை நிர்வகிக்க அனுமதி வழங்கியது. இதில் நான்கு கோடிக்கும் அதிகாமான தொழிலாளர்களின் பணம் உள்ளது. இதற்கு முன்பு பி.எப் நிதியை பாரத ஸ்டேட் வங்கி மட்டும் நிர்வகித்து வந்தது.
இதற்கு முன் பி.எப் கணக்கில் சேரும் நிதி, அரசு கடன் பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்யப்பட்டன. இப்போது முதன் முறையாக பங்குச் சந்தையிலும் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.