உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 119 டாலராக குறைந்தது.
கடந்த மாதம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 147 டாலர் வரை அதிகரித்தது. இது பல்வேறு நாடுகளை கவலையில் ஆழ்த்தியது. பல நாடுகளில் எரிசக்தி, போக்குவரத்து, உரம் தாயாரிப்பு ஆகியவற்றில் இன்றியமையாத பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது உலக அரங்குகளிலும், பல நாட்டு தலைவர்களும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக நியூயார்க் சந்தையிலும், லண்டன் சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக குறைந்தது. இதன் விலை இன்று 1 பீப்பாய் 119 டாலராக குறைந்தது.
நியூயார்க் முன்பேர சந்தையில் செப்டம்பர் மாதத்திற்கான கச்சா எண்ணெய் விலை 119.55 டாலராக குறைந்தது. கடந்த மூன்று மாதங்களில் முதன் முறையாக கச்சா எண்ணெய் விலை இந்த அளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் தேவை குறைந்தாலும், உற்பத்தி பாதிக்கப்படாமல் இருப்பதால் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரான் அணு சக்தி பற்றிய விபரங்களை வெளியிட வேண்டும் என்றும், அது அணு ஆயுதம் தயாரிப்பதாக ஐ,நா சபையில் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் கூறிவருகின்றன. இதன் விபரங்களை வெளியிடுவதும், அணுசக்தி நிலையங்களை கண்காணிக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன. ஏற்கனவே ஈரான் மீது குறிப்பிட்ட அளவு பொருளாதார தடை உள்ளது. இதை மேலும் விரிவுபடுத்தப் போவதாக எச்சரித்துள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் ஈரான் நீண்ட தூர ஏவுகணையை வெற்றிகராமாக சோதித்துள்ளது. இதனால் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டது.
இந்த பதட்டம் அதிகரித்து, ஈரான் மீது தாக்குதல் நடந்தால் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படலாம். அந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வது தவிர்க்க முடியாது என்று தெரிகிறது.