மத்திய காலத்திற்கு (Medium Term) பணவீக்கம் 3 விழுக்காடாக இருக்க வேண்டும் என்பதே குறிக்கோள் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
ரிசர்வ் வங்கி காலாண்டு பொருளாதார ஆய்வறிக்கையை இன்று வெளியிட உள்ளது. இதில் வட்டி விகிதம் கால் விழுக்காடு அதிகரிப்பு, வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் அரை விழுக்காடு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் நேற்று ரிசர்வ் வங்கி, பல்வேறு துறையினரின் பணத் தேவையை பற்றி அவசரமாக முடிவு எடுக்க வேண்டியதுள்ளது என்று கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட பொருளாதார கண்காணிப்பு அறிக்கையில், வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கை வெளியிட்டதற்கு பிறகு, மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் உயர்ந்துள்ளது. இதனால் பல்வேறு துறைக்கும் பணத் தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நிதி கொள்கை அறிவிக்கப்படும்.
கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜூலை மாதத்தில் பணவீக்கம் 11.91 விழுக்காடாக அதிகரித்து. தற்போது 11.89 விழுக்காடாக உள்ளது.
தற்போதைய நிலையில் உலக சந்தையில் உணவு மற்றும் கச்சா எண்ணெய் விலை சிறிது குறையும் என்று தெரிகிறது. ஆனால் பணவீக்கம் இதே மாதிரி சிறிது காலத்திற்கு இருக்கும்.
வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் பணவீக்கம் 4 முதல் 4.5 விழுக்காடு வரை இருக்கும் என்று கூறப்பட்டது. இதன் அடிப்படையில் மத்திய காலத்திற்கு பணவீக்கம் 3 விழுக்காடாக இருக்க வேண்டும் என்று கருதுகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாத்திற்கு பிறகு வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் 1.25 விழுக்காடு, வங்கிகளுக்கான வட்டி விகிதம் 0.75 விழுக்காடு உயர்த்தப்பட்டது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.