இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) புதுச்சேரியில் தலைமைப் பண்பு பற்றிய நேற்று ஒரு நாள் பயிற்சி முகாமை நடத்தியது.
இதில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 50 பேர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி முகாமில் தொழில், வர்த்தக நிறுவனங்களில் நிர்வாகிகளாக இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய தலைமை பண்பு, அணுகுமுறை, புதிய கண்டுபிடிப்புகள், உடனடியாக முடிவு எடுக்கும் திறன் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமை துவக்கிவைத்த புதுச்சேரி தலைவர் ஸ்ரீராம் சுப்ரமண்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இது தொழில், வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், உற்பத்தி பிரிவு மேற்பார்வையாளர்கள், மற்ற நிலையில் உள்ள நிர்வாகிகள் போன்றவர்களுக்காக நடத்தப்பட்டது.
இதன் நோக்கம் பணிபுரிபவர்களின் திறமையை அதிகபட்சம் எவ்வாறு பயன்படுத்தி கொள்வது. தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், நீண்ட நோக்கிலான பார்வை, நம்பிக்கை கொள்ளல், ஒவ்வொருவரின் திறமையையும் கண்டறிதல், ஊக்குவித்தல் போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.