இந்தியா சிமெண்ட் நிறுவனம் கூடிய விரைவில் நான்கு புதிய சிமெண்ட் ஆலைகளை அமைக்கப் போகிறது என்று ராகேஷ் சிங் தெரிவித்தார்.
இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் தலைவர் ராகேஷ் சிங், திருச்சி, மதுரைக்கான நடமாடும் கான்கிரிட் பரிசோதனை நிலையத்தை திருச்சியில நேற்று தொடங்கிவைத்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், தென் இந்தியாவில் இந்தியா சிமெண்ட் நிறுவனம் அதிக அளவு சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனமாக உள்ளது. இதற்கு சொந்தமான ஏழு சிமெண்ட் ஆலைகள் ஆந்திராவிலும் தமிழக்த்திலும் உள்ளன. இவைகளின் உற்பத்தி திறன் 90 லட்சம் டன்.
இந்த நிதி ஆண்டிற்குள் உற்பத்தியை 110 லட்சம் டன்னாகவும், 2009-10 இறுதிக்குள் 140 லட்சம் டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
சென்னை அருகே எண்ணூரில் அமைக்கப்படும் ஆலை கூடிய விரைவில் செயல்பட துவங்கும். இங்கு பத்து லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படும்.
ஹிமாசல பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்களிலும் புதிய சிமெண்ட் ஆலைகள் கூடிய விரைவில் அமைக்கப்படும் என்று கூறினார்.
விற்பனை பிரிவு துணை பொதுமேலாளர் எஸ். முத்தையா கூறுகையில், தற்போது அறிமுகப்படுத்தியுள்ள நடமாடும் கான்கிரிட் பரிசோதனை நிலையத்தின் வரவேற்பை பார்த்து, இதே மாதிரி பரிசோதனை கூடங்கள் கோவை, திருப்பூர், புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.