Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கெட்டுப் போன 10 லட்சம் டன் உணவு தானியம்!

கெட்டுப் போன 10 லட்சம் டன் உணவு தானியம்!
, வெள்ளி, 4 ஜூலை 2008 (17:53 IST)
இந்திய உணவுக் கழகத்திற்குச் சொந்தமான கிடங்குகளில் 10 லட்சம் டன் உணவு தானியம் பயன்படுத்த முடியாத அளவிற்கு கெட்டுப் போயுள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உணவுக் கழக கிடங்குகளில் பொது விநியோகத்திற்காகவும், அவசர நிலை சேமிப்பாகவும் கோதுமை, அரிசி உட்பட பல்வேறு உணவு தானியங்கள் இருப்பில் வைக்கப்படுகின்றன.

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்தும், அயல் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தும் கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுகின்றன.

கடந்த பத்தாண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 10 லட்சம் டன்னிற்கும் அதிகமான அளவிற்கு உணவு தானியம், மனிதர்கள் சாப்பிட முடியாத அளவிற்கு கெட்டுப் போய் நாசமாகியுள்ளது.

வருடததிற்கு ஒரு கோடிக்கும் அதிகமான பேர் சாப்பிடும் அளவிற்கான உணவு தானியம் கெட்டு வீணாகி போயுள்ளது.

இந்திய உணவு கழகம் உணவு தானியங்களை பாதுகாக்க ரூ.242 கோடி செலவிட்டுள்ளது. இவ்வளவு ரூபாய் செலவிட்டும் உணவு தானியத்தை இந்திய உணவு கழகத்தால் பாதுகாக்க முடியவில்லை.

அத்துடன் கெட்டுப் போன உணவு தானியத்தை அப்புறப்படுத்த ரூ.2 கோடியே 59 லட்சம் செலவழித்துள்ளது.

இந்த தகவலை டில்லியைச் சேர்ந்த ஒருவர், தகவல் பெறும் உரிமை சட்டப்படி, இந்திய உணவு கழகத்தில் கெட்டுப் போன உணவு தானியம் பற்றிய விபரம் கேட்டார். இவருக்கு அளித்துள்ள பதிலில் இருந்து, இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் இந்தியாவில் 63 விழுக்காடு குழந்தைகள் உணவு இல்லாமல் பட்டினியாக இருக்கின்றன என்ற தகவலை வெளியிட்டது.

பல கோடி பேர் உணவு கிடைக்காமல் தவிக்கையில், இந்திய உணவு கழகம் 1997 முதல் 2007 ஆம் இடைப்பட்ட பத்தாண்டுகளில் 1 லட்சத்து 83 ஆயிரம் டன் கோதுமை, 3 லட்சத்து 95 ஆயிரம் டன் அரிசி, 22 ஆயிரம் டன் நெல், 110 டன் மக்காச் சோளம் ஆகியன சாப்பிட முடியாத அளவிற்கு கெட்டுப் போனதாகத் தெரிவித்துள்ளது.

மத்திய வேளாண் அமைச்சகம், மாநில வேளாண் அமைச்சகங்கள் உட்பட உணவு தானியங்களை கையாளும் அரசு சார்பு நிறுவனங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இருப்பில் வைத்திருக்கும் கெட்டுப் போன உணவு தானியங்களின் விபரம், அதை அப்புறப்படுத்திய அல்லது கால்நடை, கோழிப் பண்ணை தீவனத்திற்காக விற்பனை செய்த அளவு, விலை, அதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் போன்ற விபரங்களை, யாரும் கேட்காமலே வெளியிட்டால் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil