இந்தியாவின் முன்பேர வர்த்தக சந்தையான மல்டி-கமோடிட்டி எக்சேஞ்சில், நியுயார்க் பங்குச் சந்தை முதலீடு செய்வது உட்பட 15 நேரடி அந்நிய முதலீட்டு திட்டங்களுக்கு இன்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அனுமதி வழங்கியுள்ளதாக, நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த அனுமதி அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின்படி வழங்கப்பட்டது. இதன் மூலம் அந்நிய நிறுவனங்கள் ரூ.308.57 கோடி முதலீடு செய்யும்.
இந்த அனுமதியின்படி நியுயார்க் பங்குச் சந்தையின் யூரோநெக்ஸ்ட், மல்டி-கமோடிட்டி எக்சேஞ்சின் 5 விழுக்காடு பங்குகளை வாங்கும். இதற்காக ரூ.21,851 கோடி முதலீடு செய்யும்.
வர்த்தக செய்திகளை வெளியிடும் இணையத் தளமான இமேஜ் மல்டிமீடியா என்ற நிறுவனத்தில் குறிப்பிட்ட துறைகளுக்கான சிறப்பு இதழ் வெளியிடுவதற்காக 26 விழுக்காடு பங்குகளுக்கு ரூ.33.37 கோடி அந்நிய நேரடி முதலீடு பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மெட்டல் ஒன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், துணை நிறுவனத்தை தொடங்குவதற்காக ரூ.32 கோடி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அஸ்வினி ஸ்டீல் என்ற நிறுவனம், சிறு தொழில் பிரிவில் தொழிற்சாலை அமைக்க ரூ.1.68 அந்நிய நேரடி முதலீடு பெற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதே போல் ஜப்பானைச் சேர்ந்த சுமிட்டோமோ ஹெவி இன்டஸ்டிரிஸ், அதன் துணை நிறுவனத்தை நிறுவ ரூ.1 கோடி முதலீடு செய்யவும், சிங்கப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.டபிள்யூ ஆப்டர் மார்க்கெட் நிறுவனம் வாகன உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் ரூ.21.20 கோடி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த கேரல் நிறுவனம் நுகர்பொருட்களின் மொத்த விற்பனை, ஆய்வு, மேம்பாட்டு ஆகியவைகளுக்காக ரூ.5 லட்சம் முதலீடு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.