Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரியல் எஸ்டேட் பரஸ்பர நிதிக்கு அனுமதி!

ரியல் எஸ்டேட் பரஸ்பர நிதிக்கு அனுமதி!
, திங்கள், 28 ஏப்ரல் 2008 (10:47 IST)
ரியலஎஸ்டேட் துறையில் முதலீடு செய்வதற்கான யூனிட்டுகளை வெளியிட்டு நிதி திரட்ட பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதற்காக பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு (மியூச்சுவல் பண்ட்) அனுமதி வழங்குவது பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்குச் சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி ஆலோசனை நடத்தி வந்தது.

ரியலஎஸ்டேட் சொத்து மதிப்புகளை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதில் செபிக்கும், இந்திய கணக்காளர் சங்கத்திற்கும் (இன்ஷ்டியூட் ஆர் சார்டர்ட் அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா) இடையே கருத்து வேற்றுமை நிலவியது.

இப்போது இதில் முடிவு எட்டப்பட்டுள்ளதால், செபி ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்ய யூனிட்டுகளை வெளியிட்டு நிதி திரட்ட பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க உள்ளது.

இதற்கான அறிவிப்பை செபி கட‌ந்த வெள்ளிக் கிழமை மும்பையில் வெளியிட்டது.

இதன்படி ரியல் எஸ்டேட் பரஸ்பர நிதி நிறுவனங்கள், தினசரி யூனிட்டுகளின் மதிப்பை வெளியிட வேண்டும். 90 நாட்களுக்கு ஒரு முறை சொத்து மதிப்பை கணக்கிட்டு அறிவிக்க வேண்டும்.

இந்த யூனிட்டுகளில் முதலீடு செய்பவர்கள் குறிப்பிட்ட காலம் வரை யூனிட்டுகளை விற்பனை செய்ய முடியாது. இவை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட வேண்டும்.

இந்த யூனிட்டுகளின் மூலம் திரட்டப்படும் நிதியில் 35 விழுக்காடு ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டும். மற்றவை ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.

இந்த திட்டங்களில் திரட்டப்படும் மொத்த நிதியில் 30 விழுக்காட்டிற்கு மேல் ஒரே நகரத்தில் முதலீடு செய்ய கூடாது. மொத்த நிதியில் 15 விழுக்காட்டிற்கு மேல், ஒரே ரியல் எஸ்டேட் திட்டத்தில் முதலீடு செய்ய கூடாது. பங்குச் சந்தையில் பதிவு செய்யாத நிறுவனத்தில் 25 விழுக்காட்டிற்கு மேல் முதலீடு செய்ய கூடாது.

ரியல் எஸ்டேட் யூனிட்டுகளை வெளியிடும் பரஸ்பர நிதி நிறுவனங்களின் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மீதோ, அல்லது அவை வாடகைக்கு இருக்கும் சொத்துக்கள் மீதோ முதலீடு செய்ய கூடாது.

இந்த திட்டங்களின் யூனிட்டுகளை, வேறு திட்டங்களில் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது.

இந்த நிதியை வீட்டு கடன் வழங்க பயன்படுத்த கூடாது.

யூனிட்டுகளின் மீதான முதலீடு, ரியல் எஸ்டேட் சொத்து முதலீடு, பரஸ்பர நிதி நிறுவனங்கள் செய்யும் முதலீடு உட்பட எல்லாவற்றையும் வங்கி வாயிலாகவே பராமரிக்க வேண்டும். ரொக்க பணமாக வாங்குவதோ, கொடுப்பதோ கூடாது. கணக்கில் வாரத வரவு செலவுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது.

ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்கும் போது இருந்த மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை 90 நாட்களுக்கு ஒரு முறை மறு மதிப்பீடு செய்து அறிவிக்க வேண்டும்.

(ரியல் எஸ்டேட் துறையில் காலி மனை, அலுவலக வளாகங்கள், அடுக்குமாடி வீடுகள் போன்றவைகளுக்கு அரசு வழிகாட்டி மதிப்பு அறிவிக்கின்றது. பெரும்பாலும் விற்பனை செய்த அல்லது வாங்கிய உண்மையான மதிப்பை விட, அரசின் வழிகாட்டு மதிப்பிலேயே பத்திரம் பதிவு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது).

இந்த மதிப்பீட்டை அங்‌கீகரிக்கப்பட்ட இரண்டு மதிப்பீட்டாளர்கள் செய்ய வேண்டும். இந்த இரண்டு மதிப்பீடுகளில் குறைவாதே கணக்கில் கொள்ள வேண்டும். இதன் படி ரிய‌ல் எஸ்டேட் பரஸ்பர நிதி யூனிட்டுகளின் அன்றாட மதிப்பீடு கணக்கிடப்பட வேண்டும்.

ரியல் எஸ்டேட் சொத்துக்கள் எனப்படுவது அசையா சொத்துக்களையே குறிக்கும். (சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ளவை உட்பட) இதில் கட்டுமானப் பணியில் உள்ளவை, பூர்த்தி அடையாத திட்டங்கள், காலிமனை, விவசாய நிலங்கள், அரசுக்காக ஒதுக்கப்பட்ட நிலம், அரசு கையகப்படுத்த அறிவித்தவைகள், ரியல் எஸ்டேட் சொத்தாக கருத கூடாது என செபி அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil