ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்காத காரணத்தினால், வீட்டுக் கடன் மற்றும் நுகர்வோர் பொருட்கள் வாங்க வழங்கப்படும் வங்கிக் கடன்கள் மீதான வட்டி அதிகரிக்கும் என்று வங்கி துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.
இன்று ரிசர்வ் வங்கி அறிவித்த பொருளாதார ஆய்வறிக்கையில் கடன் விகிதம் குறைக்கும் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வட்டி விகிதம் குறைக்கப்பட வில்லை. அத்துடன் வங்கி ரொக்க இருப்பு விகிதத்திலும் எவ்வித மாற்றமும் அறிவிக்கவில்லை.
ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. எனவே வீட்டு கடன், நுகர்வோர் பொருட்கள் மீதான கடனுக்கான வட்டி அதிகரிக்கும் என தெரிகிறது.
இந்திய வங்கிகள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், ரிசர்வ் வங்கி வட்டி குறைக்காது, ரொக்க இருப்பு விகிதத்தை மாற்றாது என்பது எதிர்பார்த்ததுதான். ரிசர்வ் வங்கி விலைவாசி உயராமல் இருக்கவும் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளது. முன்பும் இதே மாதிரி ரிசர்வ் வங்கி உள்நாட்டு நிலைமையை கவனத்தில் கொண்டு நடவடிக்கையை எடுத்தது என்று கூறினார்.
பாங்க் ஆப் பரோடாவைச் சேர்ந்த தலைமை பொருளாதார நிபுணர் ரூபா ரீகி நிட்ஸ்ரு கூறுகையில், வட்டி விகிதம் உட்பட எதையும் ரிசர்வ் வங்கி மாற்றவில்லை. இதில் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய், உணவு பொருட்கள், தங்கம் போன்ற உலேகங்களின் விலை உயர்வினால் பணவீக்கம் அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது என ரிசர்வ் வங்கி கருதுவதாக தெரிகிறது என்று கூறினார்.
ஐ.டி.பி.ஐ. கேப்பிடல் செயல் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சுசில் முக்நாட் கூறுகையில், அடுத்து வரும் மாதங்களில் வட்டி விகிதம் குறைவதற்கான அறிகுறி தெரியவில்லை. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையில் இருந்து வட்டி குறையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் வட்டி விகிதம் குறையலாம். வங்கிகளில் உள்ள வைப்பு நிதி மார்ச் மாதத்தில் திருப்பி தர வேண்டியதிருக்கும். வைப்புநிதி அளவு வட்டியால் வங்கிகளுக்கு சுமை அதிகரிக்கும். இதனால் வட்டி குறைக்க வேண்டியதிருக்கும். இது ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கும் என்று கூறினார்.