இந்தியாவில் உள்ள தொழில் வர்த்தக நிறுவனங்களில் அந்நிய நாட்டைச் சேர்ந்த தனி நபர்கள் 60 பில்லியன் (6,000 கோடி) டாலர் முதலீடு செய்ய தாயராக உள்ளனர் என்று யென் எக்ஸ்போ என்ற முதலீட்டு ஆலோசனை நிறுவனம் கூறியுள்ளது.
சர்வதேச அளவில் முதலீடு செய்வதற்கு பல்வேறு வழிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, பங்குச் சந்தை வாயிலாக முதலீடு செய்வது. இந்த நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது.
இது மட்டுமல்லாமல் அதிக அளவு பணம் வைத்துள்ள தனி நபர்கள் அதிக அளவு முதலீடு செய்யும் முறையும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு முதலீடு செய்பவர்கள் பிரைவேட் ஈக்விட்டி இன்வெஸ்டார் என அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் தனி நபராக இருக்காலாம் அல்லது சிறிய முதலீட்டு நிறுவனங்களாகவும் இருக்கலாம். இவர்கள் முதலீடு செய்யும் நிறுவனம் ஈடுபட்டுள்ள தொழிலின் எதிர்கால வாய்ப்புக்கள், இலாபம் ஈட்டும் திறன், நிர்வாகத் திறன் உட்பட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து முதலீடு செய்கின்றனர்.
இந்த வகை பிரைவேட் ஈக்விட்டி இன்வெஸ்டார் மூலம் இந்திய நிறுவனங்களில் 60 பில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு வர வாய்ப்பு உள்ளது என்று யென் எக்ஸ்போ நிறுவனம் கணித்துள்ளது.
இதன் நிர்வாக இயக்குநர் சுனில் சிரோலி பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலக அளவில் பொருளாதார வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியாவும் ஒரு நாடாக இருக்கின்றது. இதன் வளர்ச்சிக்கு அதிக முதலீடு தேவை. சென்ற வருடம் (2007) பிரைவேட் ஈக்விட்டி இன்வெஸ்டார் அதிக அளவு முதலீடு செய்துள்ளனர். இந்திய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் திரட்டிய முதலீட்டை விட, இவர்கள் அதிக அளவு முதலீடு செய்துள்ளனர்.
இங்குள்ள நடுத்தர நிறுவனங்கள் பிரைவேட் ஈக்விட்டி இன்வெஸ்டார்களிடம் இருந்து முதலீடு பெறுவது சிரமமாக இருக்கின்றது. இதற்கு காரணம் இவர்களை கவரும் வகையில் தேவையான விபரங்களை கொடுக்க முடியாமல் உள்ளனர்.
எல்லா துறையிலும் உள்ள இந்த வகை நடுத்தர நிறுவனங்கள் முதலீடு திரட்ட வசதியாக பிப்ரவரி 27 ந் தேதி மும்பையில், பிரைவேட் ஈக்விட்டி இன்வெஸ்டார் சந்திப்பு ஏற்பாடு செய்துள்ளோம். இதில் இந்தியாவைச் சேர்ந்த 25 நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன. இந்தியா மற்றும் அந்நிய நாடுகளில் இருந்து சுமார் 150 முதலீட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் முதலீடு திரட்ட உள்ள நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை நேரில் சந்திப்பார்கள். அந்த நிறுவனங்களின் வாய்ப்புகளை பரீசீலித்து முதலீடு செய்வது பற்றி முடிவு செய்வார்கள். இந்த முதலீட்டாளர்கள் ரூ.20 கோடி முதல் ரூ.200 கோடி வரை முதலீடு செய்ய தயாராக உள்ளனர். அதற்கு ஏற்றார் போல் கடந்த காலத்தில் செயல்பட்டுள்ள நிறுவனங்களை எதிர்பார்க்கின்றனர்.
இந்த வகை முதலீடு சென்ற வருடம் 15 பில்லியன் டாலர் வரை வந்துள்ளது. அதிகமான வாய்ப்பு இருந்தும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இது இந்த வருடம் இரண்டு மடங்காக வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் 60 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர் என்று கூறினார்.