பண்டிகை காலத்தில் பருப்பு, தானியங்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று வர்த்தக சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இந்த வார இறுதியில் ரம்ஜான், அதனைத் தொடர்ந்து தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகள் வரிசையாக வந்து கொண்டுள்ளன. பண்டிகையை ஒட்டி பருப்பு மற்றும் தானிய வகைகளின் தேவை அதிகமாக இருக்கும். இவைகளின் உற்பத்தி குறைவாக இருப்பதால் விலை உயரும் என்று வர்த்தக சங்கங்கள் கூறியுள்ளன.
பல்வேறு நாடுகளில் பருப்பு மற்றும் தானியங்களின் விளைச்சல் குறைவாக இருக்கி்ன்றது. இவைகளின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே 75 விழுக்காடு இடைவெளி உள்ளது. மொத்த தேவையில் 25 விழுக்காடு தான் உற்பத்தியாகி உள்ளது. இதனால் அடுத்த மாதஙகளில் இவைகளின் விலை 15 முதல் 20 விழுக்காடு வரை உயர வாய்ப்புள்ளது.
பாசுமதி ரகம் அல்லாத மற்ற ரக அரிசிகள் ஆப்பிரிக்க நாடுகளுக்கும், இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் சில வகை அரிசியை ஏற்றுமதி செய்ய தடை விதிக்காவிட்டால், அரிசியின் விலை 10 முதல் 15 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று அசோசெம் என்ற வர்த்தக சங்கம் எச்சரித்துள்ளது.
இது பற்றி அசோசெம் தலைவர் வேணுகோபால் என். தத் கூறுகையில், இந்தியாவிற்கு வருடத்திற்கு 200 லட்சம் டன் தானியம் தேவைப்படுகிறது. உள்நாட்டில் 130 லட்சம் டன் உற்பத்தியாகிறது. உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே 70 லட்சம் டன் பற்றாக்குறை உள்ளது.
இந்த பற்றாக்குறையை இறக்குமதி செய்வதன் மூலம் நிரப்ப முடிவதில்லை. இதன் காரணமாக அடுத்த 25 நாட்களில் தானியங்களின் விலை 15 முதல் 20 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்றார்.
இவர் மேலும் கூறுகையில், தற்போது தானியங்கள் சில்லரை விற்பனையில் கிலோ ரூ. 35 முதல் 45 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை அடுத்த சில வாரங்களில் கிலோ ரூ. 45 முதல் ரூ. 55 வரை உயர வாய்ப்புள்ளது.
பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசியை ஆப்பிரிக்க நாடுகள், இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவை குறைக்காவிட்டால், அரிசியின் விலை 10 முதல் 15 விழுக்காடு அதிகரிக்கும். இதன் விலை உயர்வால், மற்ற பொருட்களின் விலையும் அதிகரிக்கும.
பாகிஸ்தானில் தானியங்களின் விளைச்சல் நன்றாக உள்ளது. அங்கு தேவையை விட அதிக விளைச்சல் உள்ளது. எனவே குறுகிய கால நடவடிக்கையாக பற்றாக்குறையை ஈடுகட்ட பாகிஸ்தானில் இருந்து பருப்பு, தானிய வகைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என்று அசோசெம் கூறியுள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக தானியங்கள், பருப்பு வகைகள் பயிரிடப்படு்ம் அளவு அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் உற்பத்தி அதிகரிக்கும். பற்றாக்குறையை ஈடுகட்டலாம் என்று அசோசெம் தலைவர் தத் கூறினார்.
மியான்மரில் (பர்மா) இருந்து கணிசமான அளவு பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மியான்மரில் ராணுவ ஆட்சியாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மியான்மரில் இருந்து பருப்பு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளன. பருப்பு விலை அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்.
இந்தியாவில் தானியங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. அதனால் கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு பருப்பு, நவதானியங்களை பயிரிட்ட விவசாயிகள், மற்ற பணப்பயிருக்கு மாறிவிட்டனர்.
முறையான பாசன வசதி இல்லாமல், மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்படும் பகுதிகளில் உள்ள விவசாயிகள் காட்டு கருவலை போன்ற அதிகளவு தண்ணிர் தேவைப்படாத மாற்றுப் பயிர்களை பயிர் செய்கின்றனர். இவைகளும் இந்தியாவில் பருப்பு மற்றும் தானியம் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்களாகும்.