அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.
கடந்த சில தினங்களாக, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வந்தது. இந்த போக்கை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, நேற்று நேரடியாக தலையிட்டு, அந்நியச் செலவாணி சந்தையில் குவியும் டாலர்களை வாங்க துவங்கியது.
அத்துடன் இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள், வர்த்தக, தொழில் நிறுவனங்கள் , தனிநபர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்யும் அளவையும் அதிகரித்தது.
இதனால் நேற்று முதல் அந்நியச் செலவாணி சந்தையில், டாலரின் மதிப்பு குறையத் துவங்கியது.
இன்று வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலவாணி சந்தையில், காலையில் 1 டாலர் ரூ. 39.69/ 70 என்று வர்த்தகம் துவங்கியது.
மத்திய அரசுக்கு சொந்தமான பவர் கிரிட் கார்ப்பரேஷன், டாலர்களை வாங்க துவங்கியதும், ரூபாயின் மதிப்பு குறைந்து, 1 டாலர் ரூ 39.83/84 என்ற நிலை காணப்பட்டது. பிறகு 11 மணியளவில் 1 டாலர் ரூ. 39.77/ 78 என்ற அளவில் இருந்தது.
ரிசர்வ் வங்கி, டாலரின் மதிப்பு குறைவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், டாலரின் விலை இதே அளவிற்கு தொடரும் என்று வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.