தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை நுகர்வு குறைந்துள்ளதால் முட்டையின் விலை தற்போது விற்பனையாகும் விலையான ரூ.1.60 ல் இருந்து 10 காசு குறைத்து ரூ.1.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தற்போதுள்ள முட்டை உற்பத்தி மற்றும் அதன் தேவைகள் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா சந்தையில், புரட்டாசி மாத விரதம் மற்றும் ரம்ஜான் பண்டிகையால் முட்டை நுகர்வு மக்களிடையே வெகுவாக குறைந்தது.
புரட்டாசி மாதத்தில் விரதத்தை பின்பற்றுவதால் அசைவ உணவை பெரும்பாலோனோர் விரும்பி சாப்பிடுவதில்லை. அதனால் உள்ளூர் சந்தையில் முட்டை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரம்ஜான் பண்டிகை மற்றும் மீன் வரத்து தற்போது அதிகரித்துள்ளதால் முட்டை விற்பனை குறைந்தது.
இதன் காரணமாக முட்டை விலை கடந்த வாரம் ரூ.1.60 ஆக இருந்ததை பத்து காசு குறைத்து ரூ.1.50 ஆக நிர்ணயித்துள்ளனர். நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை விபரம் வருமாறு:
ஹைதராபாத் 151 காசு, விஜயவாடா 152 காசு, நெல்லூர் 161 காசு, சென்னை 168 காசு, மைசூர் 160 காசு, பெங்களூர் 160 காசு, மும்பை 169 காசு, டில்லி 170 காசு, கோல்கத்தா 179 காசு. முட்டைக்கோழி விலை கிலோ ரூ.18 என நாமக்கல்லில் நேற்று நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கறிக்கோழி விலை கிலோ ரூ.38 என பல்லடத்தில் நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.