இன்று (திங்கட் கிழமை) பங்குச் சந்தைகளை நிர்ணயிக்கப் போவது ரிலையன்ஸ் பவர் பங்குகளும், மற்ற நாடுகளின் பங்குச் சந்தை நிலவரமும் தான்.
ரிலையன்ஸ் பவர் பங்குகள் இன்று பட்டியலிடப்படுகிறது. இந்த பங்கின் விற்பனை தொடங்குவதால், பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அதிகரிக்கும் என்று நினைக்கின்றனர். அதே போல் இது பங்குச் சந்தைக்கு நல்லதல்ல என்று கருதுகின்றனர்.
இந்த பங்குகளை வாங்கியவர்களில் பெரும்பாலோர் விற்பனை செய்ய துவங்குவார்கள். பலர் வாங்க முயற்சி செய்வார்கள்.
இதனால் இதன் விலை அதிக அளவு ஏற்ற இறக்கமாக இருக்கும்.
ரிலையன்ஸ் பவர் பங்குகளுக்கு விண்ணப்பம் வாங்க துவங்கிய போது, அதிகாரபூர்வமற்ற சந்தையில் (கிரே மார்க்கெட்) ரூ.500 வரை கூடுதல் விலை இருந்தது. இப்போது கூடுதல் விலை ரூ.100 முதல் ரூ.200 ஆக குறைந்து விட்டது. இதற்கு காரணம் இந்தியாவில் மட்டுமல்லாது, எல்லா நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்து வருவதே.
கடந்த 2-3 நாட்களின் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடுகளின் ஏற்ற இறக்கத்தை கூர்ந்து கவனித்தால்,5070 என்ற அளவு முக்கிய இடத்தை வகிப்பதை உணரலாம். திங்கட் கிழமை காலை வர்த்தகம் தொடங்கும் போது நிஃப்டி அதிக அளவு வேறுபாடு இல்லால் இருக்கும்.
நிஃப்டி 5155/5185/5240 என்ற அளவில் இருக்கும். 5240 க்கும் அதிகரித்தால், அதன் பிறகு 5280/5320 வரை உயரவாய்ப்பு உள்ளது.
இதற்கு மாறாக 5070/5000/4900 என்ற அளவு குறைய வாய்ப்பு உள்ளது. 4900 என்ற அளவிற்கு குறைந்தால், அதன் பிறகு 4730/4650 என்ற அளவிற்கு குறையும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய பங்குச் சந்தைக்கு திங்கட் கிழமை முக்கியமான நாள். பங்குகளை வெளியிட்டு அதிக தொகை திரட்டிய ரிலையன்ஸ் பவர் பங்கு பட்டியலிடப்படுகிறது. திங்கட்கிழமை சந்தையில் எதுவும் நடக்கலாம்.
வெள்ளிக்கிழமை நிலவரம்.
வெள்ளிக் கிழமை இரண்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் சூறாவளியில் சிக்கிய பாய்மர படகு போல் தள்ளாடின. எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் அதிகரிப்பதும், மீண்டும் குறைவதுமாக இருந்தன. ஐரோப்பிய சந்தைகளில் இருந்து வந்த தகவல்களினால் மதியம் 3 மணிக்கு பிறகு பங்குகளின் விலை உயர துவங்கியது. இதனால் காலையில் அதிக அளவு சரிந்த குறியீட்டு எண்கள் இறுதியில் மீண்டன. இறுதியில் சென்செக்ஸ் 17,500 க்கும் குறைந்தது.
பங்குச் சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இரண்டு பங்கு வெளியிடுகள் திரும்ப பெறப்பட்டன. வொக்கார்ட் மருத்துவமனை பங்கு, எம்மார் எம்.ஜி.எப் நிறுவனத்தின் பங்கு வெளியீடு ரத்து செய்யப்பட்டது.
சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகள் மட்டுமல்லாது மிட்கேப், சுமால் கேப் பிரிவு பங்குகளின் விலையும் குறைந்தன. அது மட்டுமல்லாமல் வர்த்தகமும் மிக குறைந்த அளவே இருந்தது.
சென்செக்ஸ் 62 புள்ளி குறைந்து 17,464 ஆகவும், நிஃப்டி 12 புள்ளி குறைந்து 5120 ஆகவும் முடிந்தது.
எம்.ஆர்.பி.எல், ஆர்.பி.ஐ, ஆர்.என்.ஆர்.எல், ஹிந்துஸ்தான் யூனிலிவர், நாகர்ஜீனா பெர்டிலைசர்ஸ், ரோல்டா, ஐ.டி.சி, ஏர் டெக்கான், ஆகிய பங்குகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்தினர்.
ஜே.பி.அசோசியேட், யூனிடெக், ரிலையன்ஸ் கேப்பிடல், பூஞ்ச் லாயிட், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகிய பங்குகளின் விலை அதிக அளவு விற்பனை செய்தனர். மொத்தம் ரூ.59,384 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.(வியாழக் கிழமை 61,429 கோடி).