கடலூர்: சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களைப் பார்வையிட கடலூர் மாவட்டத்துக்கு நேற்று மத்தியக் குழு வந்தது. இந்த குழுவினரிடம், கடலூர் மாவட்ட விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை மனு அளித்தது.
இந்த கூட்டமைப்பின் தலைவர் வேங்கடபதி, பொதுச் செயலாளர் ஏ.பி.ரவீந்திரன், பொருளாளர் கார்மாங்குடி வெங்கடேசன், தலைமை நிலையச் செயலாளர் பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பது:
வெள்ளச் சேதம். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தி இருக்கிறது. இரு வட்டங்களிலும் ஏரிகள்., குளங்கள் மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதற்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்.
விருத்தாசலம், கடலூர், திட்டக்குடி, பண்ருட்டி வட்டங்களிலும் மழையால் நெல், கரும்பு, வாழை, மக்காச் சோளம், பருத்தி, மணிலா, மலர்ச் செடிகள், காய்கறிகள், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.
எனவே மேற்படி வட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க அரசுக்கு மத்தியக் குழு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.