திருச்சி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் நெல், வாழை சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மகசூல் பாதிப்பு இருக்கும் என்ற கவலையில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 23 ஆம் தேதி முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல இடங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், திருச்சி மாவட்டத்தில் 21,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இதில் காலதாமதமாக நடவு செய்து 15 முதல் 25 நாட்களே ஆன இளம் பயிர்களும், அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த பயிர்களும் உள்ளன.
இந்தப் பாதிப்பு புள்ளம்பாடி, லால்குடி, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், அந்தநல்லூர் ஆகிய வட்டாரங்களில் அதிகம் ஏற்பட்டுள்ளது.
நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், நிலத்தில் இருந்து தண்ணீர் வடிந்த பிறகே, சேத மதிப்பீடு தெரிய வரும் என வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும், பாதிப்பு இருக்கும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.
இதுபற்றி பாரதிய கிசான் சங்க மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் என். வீரசேகரன் தெரிவித்தது:
"வயல்களில் தொடர்ந்து நீர் தேங்கியிருப்பதால், காற்றோட்டம் தடைபடும். இதனால், நாற்றுகள் நிச்சயமாக அழுகியிருக்கும்; சத்தும் இருக்காது.
எனவே, நாற்றுகளைப் பறித்துவிட்டு, மீண்டும் நடவு செய்ய வேண்டும்.
மேலும், சாய்ந்துவிட்ட பயிர்களுக்கு கூடுதலாக உரம் இட வேண்டும். எனவே, ஆள் கூலி உள்பட ஏக்கருக்கு சுமார் ரூ. 2,000 கூடுதல் செலவாகும்.
அவ்வாறு செய்தாலும்கூட, ஏக்கருக்கு 30 மூட்டைகள் மகசூல் கிடைப்பதற்குப் பதிலாக 20 மூட்டைகள்தான் கிடைக்கும்' என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் புலியூர் ஏ. நாகராஜன் கூறுகையில்,
கரும்பு பயிரிடப்பட்டுள்ள வயல்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளன. வாழைத் தோட்டத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளதுடன், சென்ற வியாழக்கிழமை வீசிய பலத்தக் காற்று காரணமாக பல வாழை மரங்கள் சாய்ந்துள்ளன.
பல வாழை தோட்டங்களில், வாழைகள் வேரோடு சாய்ந்துவிட்டன. அவற்றை மீண்டும் நிமிர்த்தி நட்டு வைக்க மண், உரம், முட்டுக் கொடுக்க சவுக்கு அல்லது மூங்கில்கள் போன்றவை தேவைப்படும்.
இதனால், ஒரு மரத்துக்கு கூடுதலாக ரூ. 50 வீதம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறு நட்டு வைத்தாலும் மகசூல் பாதிப்பு இருக்கும். எனவே, வாழைத்தாரின் எடை நான்கில் ஒரு பங்காகக் குறைந்துவிடும். எனவே, கூடுதலாக செலவு செய்தாலும், உரிய விலை கிடைக்காமல் போவதுடன் நஷ்டம்தான் ஏற்படும்.
எனவே, உரம், சவுக்கு அல்லது மூங்கில் குச்சிகள் போன்றவை இலவசமாகவோ அல்லது குறைந்தபட்ச வாடகைக்காகவோ வழங்க வேண்டும்' என்று நாகராஜன் தெரிவித்தார்.
இதேபோல, புள்ளம்பாடி, மால்வாய், பெருவளப்பூர், கண்ணனூர் ஆகிய பகுதிகளில் ஏறத்தாழ 2,500 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, மக்காச்சோளம் பயிர்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
எனவே, தண்ணீர் வடிந்த பிறகு, உடனே சேத மதிப்பீடு கணக்கிட்டு, உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று வசாயிகளின் எதிர்பார்க்கின்றனர்.