அம்பாசமுத்திரம்: மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டன.
இந்த பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணை பகுதியில் 52 மி.மீ, பாபநாசம் கீழ் அணை பகுதிகளில் 85 மி.மீ. பதிவாகியுள்ளது.
இதே போல் சேர்வலாறு அணை பகுதியில் 9 மி.மீ, மணிமுத்தாறு அணை பகுதியில் 58 மி.மீ, அம்பாசமுத்திரத்தில் 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
பாபநாசம் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்தது. இந்த அணைக்கு வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த அணைக்கு முன்பு விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவாதால், பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டன. அதே நேரத்தில் குடிநீர்த் தேவைக்காக பாபநாசம் அணையில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1 அடி அதிகரித்தது. இதன் நீர் மட்டம் 70.90 அடியாக அதிகரித்தது. இதே போல் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 அடி அதிகரித்தது. இதன் நீர் மட்டம் 84.48 அடியாக அதிகரித்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 65 அடியாக உயர்ந்தது.