காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியான கொடுகு பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத்துவங்கி உள்ளது.
இந்த வருடம் கொடுகு பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதாக கொடுகு மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் 9ஆம் தேதி (நேற்று) வரை 373.34 மில்லி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 185.52 மில்லி மீட்டர் மழைதான் பதிவானது.
கொடுகு பிரதேசத்தில் அமைந்துள்ள இதுவரை மடிகிரியில் 502.42 மில்லி மீட்டர், விராட்பெட்டில் 349.5 மில்லி மீட்டர், சோமாவார்பெட்டில் 268.10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மண் எண்ணெய் ஆகியவற்றை தேவையான அளவு இருப்பில் வைக்கும்படி உணவு வழங்கல் துறை அதிகாரிகளுக்கு நேற்று துணை ஆணையாளர் கே.ஆர்.நிரஞ்சன் உத்தரவிட்டார்.
அவர் பகமன்டலா,நல்லியாகுடிகிரி, குகா, டிப்ரி, கரடிகோடு, லட்சுமண டிரிட்டா உட்பட சில இடங்களில் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மேட்டூர் அணையின் நீர் மட்டம் 103.30 அடியாக உ.யர்ந்தது. அணையின் அதிகபட்ச உயரம் 120 அடி.
அணைக்கு விநாடிக்கு 2,640 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
காவிரி பாசன பகுதி விவசாயத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. ஆரம்பத்தில் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும். பிறகு இது படிப்படியாக விநாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்படும்.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஆரம்பிக்கும் முன்னரே தொடங்கி உள்ளது. தென் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் பருவ மழை துவங்கியுள்ளது.
தமிழகத்தில் நேற்று வால்பாறையில் 2 செ.மீ, புதுக்கோட்டை மாவட்டம் அரிமலத்தில் 1 செ.மீ. மழை பதிவானது.
சென்னையில் 1 மில்லி மீட்டர், கொடைக்கானல், சேலத்தில் 4 மில்லி மீட்டர் மழை பதிவானது. சில பகுதிகளில் லேசான தூறல் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.