நாடு முழுவதும் உழவர்களிடம் இருந்து அரசு முகவாண்மைகள் மூலம் 154.2 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இது இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 150 லட்சம் டன் என்பதைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவடை காலம் முடியாத நிலையில் கூடுதலாக இன்னும் 30 லட்சம் டன் கோதுமையை இருப்பிற்காகக் கொள்முதல் செய்ய முடியும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
"இந்த அறுவடைக் காலத்தில் (ஏப்ரல் 1 முதல் ஜூன் 15 வரை) 180 லட்சம் டன் கோதுமையைக் கொள்முதல் செய்ய முடியும் என்று நம்புகிறோம்" என்று இந்திய உணவுக் கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அலோக் சின்ஹா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நமது நாட்டின் மிகப்பெரிய உணவு தானியக் கொள்முதல் நிறுவனமான இந்திய உணவுக் கழகம், ஏப்ரல் 1 ஆம் தேதி 55.49 லட்சம் டன் கோதுமையைக் கொள்முதல் செய்திருந்தது. இது வழக்கமான 40 லட்சம் டன் என்பதை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
2007- 2008 இல் அரசு முகவாண்மைகளில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்த கோதுமையின் அளவு 111.2 லட்சம் டன்களாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக போதுமான அளவு நெல் கொள்முதல் இல்லாததால் அவசரகால இருப்புத் தேவைக்காக அயல்நாடுகளில் இருந்து கோதுமை கொள்முதல் செய்யும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டது.
2006 ஆம் ஆண்டில் மொத்தம் 92 லட்சம் டன் கோதுமை மட்டுமே கொள்முதல் ஆனதால், 55 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. 2007 ஆம் ஆண்டிலும் பற்றாக்குறை நீடித்ததால் 18 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது.