ஹரியானா மாநிலத்தில் ஒப்பந்த முறை விவசாயம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் விளை பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை கிடைக்க வேண்டும் என்று சாதி லால் பத்ரா கூறினார்.
ஹரியானா மாநிலம் பஞ்சுக்லா நகரில் " ஒப்பந்த முறை விவசாயம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விவசாயிகளும், உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கை ஹரியானா மாநில விவசாய விளை பொருட்கள் வாணிப கழகத்தின் தலைவர் சாதி லால் பத்ரா தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
“விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விலை கிடைப்பதை உறுதிப்படுத்தினால்தான், மாநிலத்தில் ஒப்பநத முறை விவசாயம் அதிகரிக்கும்.
விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு தகுந்த தொழில் நுட்பம், தரமான விதை, உரம் போன்ற இடு பொருட்களை கொடுக்க வேண்டும். அப்போது தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நல் விலை கிடைக்கும்.
உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் விவசாயிகள் தரமான பொருட்களை உற்பத்தி செய்வதை உறுதிப்படுத்த தரமான இடு பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும். அவர்கள் தெரிவிக்கும் குறைகளை விசாரித்து தீர்வு காணும் அமைப்பு ஏற்படுத்த வேண்டும். இதற்கு விதிமுறைகள் வகுப்பப்பட வேண்டும்.
விவசாயிகள் ஒப்பந்த முறையில் விவசாயம் செய்தால் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அதிக விலை கிடைப்பதுடன், வருவாயும் அதிகரிக்கும். இந்த திட்டத்தில் இணைய விரும்பும் நிறுவனங்கள் ஹரியானா மாநில விவசாய விளை பொருட்கள் வாணிப கழகத்திடம் ரூ.5,000 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த பதிவு கட்டணம் மூன்று ஆண்டுகளுக்கானது. அதற்கு பின் வருடா வருடம் பதிவு புதுப்பிக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.
இந்த வாணி கழகத்தின் நிர்வாக அதிகாரி ராம் நிவாஸ் பேசுகையில், ஏற்கனவே சில நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டுள்ளன. சில பதிவு செய்து கொள்வதற்காக விண்ணப்பித்து உள்ளன. இதில் பதிவு செய்து கொள்ளும் நிறுவனங்களுக்கு தரமான பொருட்கள் அதிகளவு கிடைக்கும். இது அவர்கள் தரமான பதப்படுத்தப்பட்ட உணவுகளை தயாரிப்பதற்கும், அதை நல்ல விலையில் விற்பனை செய்வதற்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறினார்.