மரபணு மாற்றத்தால் கால்நடைகளும் அழிந்து வருகின்றன என்று இயற்றை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பு சார்பில் நுகர்வோருக்கான கருத்தரங்கம் ஈரோட்டில் நடந்தது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமை தாங்கிப்பேசினார்
அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் தற்போது இயற்கை விவசாயம் மாறி, ரசாயனம், பூச்சி மருந்து இவற்றால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் 30 வினாடிக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்ளும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
மரபணு மாற்றுப் பயிர்களால் குறிப்பிட்ட பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்த இயலும். இதர பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லியை அதிகளவு பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
பூக்களில் மொய்க்கும் தேன், வண்டுகள் இவற்றுக்கு கூட மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. மரபணு மாற்றத்தால் கால்நடைகளும் அழிந்து வருகின்றன. குறிப்பாக புகழ்பெற்ற காங்கேயம் கால்நடைகள் அழிந்து வருகின்றன.
ஆந்திர மாநிலத்தில் ஒரு விவசாயி, தன் ஒரு ஏக்கர் நிலத்தில் 1.5 கிலோ நெல்லை ஒற்றை நாற்று முறையில் பயிரிட்டு ஏழு டன் நெல் விளைச்சல் பெற்றுள்ளார். இதை பார்த்த ஆந்திர மாநிலம் ஒற்றை நாற்று முறைக்கு ரூ. 4 கோடி மானியம் வழங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது ஒற்றை நாற்று முறை அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒற்றை நாற்று முறையில் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதில்லை. இதனால் விளை நிலங்களும் பாதிக்கப்படாது.
இந்தியாவில் உயர்ரக மாடுகள் வைத்திருந்தால் மானியம் வழங்குவதில்லை. பால் விலையும் குறைந்துவிட்டது. ஆனால், அமெரிக்கா நாட்டில் உயர் ரக மாடுகள் வைத்திருப்போருக்கு இரண்டு டாலர் மானியம் வழங்கப்படுகிறது.
இதனால் பாலை குறைந்த விலைக்கு விற்கின்றனர். பால் பவுடராக்கி இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் 47 வேளாண்மைப் பல்கலைக்கழகங்களும், 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களும் செயல்படுகின்றன. பல்கலைக்கழகங்களுக்கும், ஆராய்ச்சி மையங்களுக்கும் ஆண்டுதோறும் மக்கள் வரிப்பணத்தில் இருந்து கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. இந்தியாவில் உள்ள நிலங்களை நமது சூழ்நிலைக்கு ஏற்ப மேம்படுத்த இந்தியா வேளாண் துறை முன் வர வேண்டும். இந்தியாவில் 62 கோடி பேர் உற்பத்தியாளர்கள் உள்ளனர். ஆனால், 112 கோடி பேர் நுகர்வோராக உள்ளனர்.
நுகர்வோரின் உணவுக்கான உத்தரவாதமும், உழவர்களின் வாழ்வுரிமையும் கேள்விக்குரியதாகி வருகிறது. பறிக்கப்படும் உரிமைகளை நுகர்வோர் பாதுகாக்க வேண்டும் என்று அவர் பேசினார்.