காலியாக உள்ள 222 சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலூர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் செயல்படும் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் என மொத்தம் 222 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். உதவியாளர் பணியிடத்திற்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் வயது, கல்வித்தகுதி, சாதி, சமூகநிலை (ஊனமுற்றோர், விதவை) ஆகியவற்றிற்கான நகலை இணைக்க வேண்டும். தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களுடன் விண்ணப்பங்களை வருகிற 26ஆம் தேதி முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே கொடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.