இந்தியாவில் உடல் ஊனமுற்றோர் சொந்த தொழில் துவங்கி அதில் வெற்றி பெற தேசிய உடல் ஊனமுற்றோருக்கான நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை, பலருக்கு வேலை கொடுக்கும் வகையில் உடல் ஊனமுற்றவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் இந்த கழகம் செயல்படுகிறது.
இதில்,
சிறிய நிறுவனங்களுக்கு:
சிறிய கடை, தொழில் நிறுவனம் போன்றவற்றை துவக்க உடல் ஊனமுற்றவர்களுக்கு கடன் அளிக்கப்படுகிறது. கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சமும், பொதுமக்களுக்கு சேவை தொடர்பான அமைப்புகள் தொடங்க அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரையும் கடன் அளிக்கப்படும்.
வாகனத்திற்கு:
வணிக நோக்கத்துடன் வாகனங்கள் வாங்கவும் கடன் அளிக்கப்படுகிறது. அதாவது ஆட்டோ, ஆட்டோ ரிக்ஷா, வாடகைக்கு ஓட்டப்படும் கார் போன்றவை வாங்க அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் அளிக்கப்படும்.
தொழில் துவங்க:
சிறுதொழில்கள் துவங்க அதிகபட்சமாக 5 லட்சம் வரை கடன் அளிக்கப்படும்.
இந்த தொழில் நிறுவனத்தின் முதலாளி அல்லது முதன்மை செயலாளர் ஒரு உடல் ஊனமுற்றவராகவும், அதில் பணியாற்றும் பணியாளர்களில் 15 விழுக்காடு பேராவது உடல் ஊனமுற்றவராகவும் இருக்க வேண்டும்.
விவசாயம்:
வேளாண்மையில் ஈடுபட்டு வேளாண் பொருட்களை உற்பத்தி செய்வது, வேளாண்மைக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வது, வேளாண் துறை சார்ந்த இயந்திரங்களை வாங்குவது, வேளாண் துறை சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்துதல் போன்றவற்றிற்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கு கடன் அளிக்கப்படும். இது அதிகபட்சம் ரூ.5 லட்சமாக இருக்கும்.
சுய தொழில்:
மனநிலையில் லேசான பிழற்சி மற்றும் சில உடல் குறைபாடு கொண்டவர்களுக்கு சுய தொழில் துவங்க அதிகபட்சம் ரூ. 3 லட்சம் வரை கடன் அளிக்கப்படுகிறது. ஒரு சில நேரங்களில் இந்த கடன் உதவி கொஞ்சம் விரிவாக்கப்பட்டு, உடல் ஊனமுற்றவர்களின் பெற்றோர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களை பாதுகாத்து வருபவர்களுக்கும் அளிக்கப்படுகிறது.
கல்விக்கு:
உடல் ஊனமுற்றவர்களுக்கு கல்விக் கடனும் அளிக்கப்படுகிறது. அதாவது கல்விக் கட்டணம், மாதக் கட்டணம், புத்தகங்கள் மற்றும் பிற பொருட்கள் வாங்கவும் கடன் அளிக்கப்படும். இந்தியா மற்றும் வெளிநாட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் படிக்கும் மாணாக்கர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த கடன் பெற தகுதியானவர்கள்:
1. இந்தியக் குடிமகனாக இருக்கும் 40 விழுக்காடும் அல்லது அதற்கும் மேற்பட்ட உடல் ஊனமுற்றவர்.
2. பெற்றோர் அல்லது பாதுகாவலர் சராசரி சம்பளம் வாங்குபவராக இருத்தல்
3. முந்தைய தேர்வுகளில் குறைந்தது இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (50%)
இந்த திட்டம் அனைத்து மாநில முறைப்படுத்தப்பட்ட கழகம் மற்றும் தேசிய வங்கிகள் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும்.
இதுபற்றிய மேலும் தகவல்களுக்கு http://www.nhfdc.org/ என்ற இணையதளத்தைப் பாருங்கள்.