தமிழகத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்யவும், அவர்களது கார்களை ஓட்டும் பணியிலும் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த காவலர்கள் திரும்ப அழைக்கப்பட வேண்டும் என்று உள்துறை செயலர் மாலதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் மட்டும் அயல் பணி என்று கூறி சுமார் 800 காவலர்கள் இதுபோன்ற வீட்டு வேலை செய்து வருவது தெரிய வந்துள்ளது. ஒரு சில அதிகாரிகளின் வீடுகளில் 15 முதல் 25 காவலர்கள் வரை பணியில் உள்ளனர்.
இப்படியாக தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவலர்கள் அதிகாரிகள் வீட்டில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் எல்லோரையும் மீண்டும் பணிக்கு அழைக்க வேண்டும் என்று உள்துறைச் செயலாளர் மாலதி உத்தரவிட்டார்.
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் ஒரு சிலர் வெளிநாட்டில் வசிக்கின்றனர். அவர்களது சென்னை வீட்டிலும் காவலர்கள் வேலை செய்கின்றனர்.
இதுபோன்ற காவலர்களை உடனடியாக திரும்ப அழைக்குமாறு காவல்துறை ஆணையர் ராதா கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக அவர் தனது வீட்டில் பணியாற்றிய 2 காவலர்களை திருப்பி அனுப்பிவிட்டார். இதையடுத்து, ஓய்வு பெற்ற மற்றும் இப்போது பணியிலுள்ள காவல்துறை அதிகாரிகளின் வீட்டில் பணியாற்றும் காவலர்களை திரும்ப அழைக்கும் பணி தொடங்கியுள்ளது.