நெல்லை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வுக்கு, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கப்படும் இலவச பயிற்சியில் சேர நாளை நேர்காணல் நடக்கிறது.
இது குறித்து நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ஜான்பிலிப்போஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு தேர்வாணையம் ஒருமித்த சார்நிலை பணிகள் அடங்கிய பணிகளுக்கான சுமார் 1,291 பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணி இடங்களுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 18ஆம் தேதி ஆகும். எழுத்து தேர்வு வருகிற மார்ச் மாதம் 22ஆம் தேதி நடக்கிறது.
இந்த பணி இடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண், பெண் மனுதாரர்கள் உரிய படிவத்தை ஏதாவது ஒரு தபால் நிலையத்தில் பெற்று உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்தகைய போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்ய தேவையான புத்தகங்கள், வழிகாட்டும் கையேடுகள், தரமான பொது அறிவுப் புத்தகங்கள் மற்றும் மாதாந்திர, வாராந்திர இதழ்களும் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் அதிக அளவில் உள்ளன.
மேலும், கைதேர்ந்த வல்லுனர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு இலவச பாடக் குறிப்பும் வழங்கப்பட உள்ளன.
எனவே, இந்த எழுத்து தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆண், பெண் மனுதாரர்கள் தன்னார்வ பயிலும் வட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம். இத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களும் இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்களும் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.