தஞ்சாவூரில் நடைபெற இருந்த, ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு மழை காரணமாக வருகிற 14ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனர் கதீஜா பேகம் தெரிவிக்கையில், "இந்திய ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு தஞ்சாவூரில் கடந்த நவம்பர் 27 முதல் டிசம்பர் 3ஆம தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் மழை காரணமாக இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் படி வருகிற 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு திடலில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.
சோல்ஜர் டெக்னிக்கல், நர்சிங் அசிஸ்டென்ட் பதவிக்கு வயது 17 முதல் 23-க்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சியுடன் 50 விழுக்காடு மதிப்பெண் இருத்தல் வேண்டும். சோல்ஜர் ஜெனரல் பதவிக்கு வயது 17 முதல் 21-க்குள்ளும், கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சியில் 45 விழுக்காடு மதிப்பெண் இருத்தல் வேண்டும்.
சோல்ஜர் டிரேட்ஸ்மேன் பதவிக்கு வயது 17 முதல் 23-க்குள் இருத்தல் வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். சோல்ஜர் கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பதவிக்கு வயது 17 முதல் 23-க்குள்ளும், கல்வித்தகுதி பிளஸ் 2 தேர்ச்சியில் 50 விழுக்காடு மதிப்பெண் இருத்தல் வேண்டும்.
உடனடியாக வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், விருப்பமும் கொண்ட இளைஞர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்கள் பெற ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்" என்று கூறியுள்ளார்.