நாடு முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்படவுள்ள நிலையில், தமிழகம்- புதுவையில் உள்ள 701 கல்வி நிலையங்கள் இதை கடுமையாகப் பின்பற்ற முடிவு செய்துள்ளன.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, மத்திய சுகாதாரத்துறை, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு ஆகியவை கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக, புகைபிடிப்பதை முழுவதும் கட்டுப்படுத்த கல்வி நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
இதன்படி அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தங்கள் கல்வி நிலைய வளாகங்களில் புகைபிடிப்பது முழுவதும் தடை செய்யப்படும் என்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 701 கல்வி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதில் 600 பள்ளிகளும் 100 கல்லூரிகளும் அடங்கும்.
கல்வி நிறுவனங்களுடன் நடந்த கூட்டத்தில் புகையிலையினால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், அதனை தடை செய்ய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதன் பின்னர் கல்வி நிறுவனங்கள் இம்முடிவுக்கு வந்தன.