எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரைப் படித்த 700 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் ஜவகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " மதுரை மாவட்டத்தில் 18 வயதிற்குமேல் 35 வயதிற்குட்பட்ட 8ஆம் வகுப்பு முதல் பட்டதாரி வரை தேர்ச்சிபெற்ற 700 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழில் பயிற்சி அளிக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. மகளிர் திட்ட அலுவலகம் மூலமாக இந்த பயிற்சி பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
முதற்கட்டமாக மதுரை டி.வி.எஸ்., ஐலீடு ஆகிய நிறுவனங்களில் பயிற்சிக்கு 235 இளைஞர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். அதன்படி மதுரை டி.வி.எஸ். கல்வி, ஆராய்ச்சி மையத்தில் பட்டதாரிகளுக்கு 4 மாதகால அலுவலக மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது.
8ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்களுக்கு வீடுகளில் செவிலியர், மருத்துவமனை மேலாண்மை, மோட்டார் மெக்கானிசம், எலெக்ட்ரிக்கல் பயிற்சியும், 5ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்களுக்கு கொத்தனார், கம்பி கட்டுதல் இல்ல மேலாண்மை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த பயிற்சிகளுக்கான காலம் 6 மாதம் ஆகும். இதற்கான நேர்முகத்தேர்வு வரும் 7ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறுகிறது.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஐலீடு நிறுவனத்தில் வரவேற்பாளர், விருந்தோம்பல், எலெக்ட்ரிக்கல் (வயர்மேன்) ஆகிய 4 மாதகால பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கான நேர்முகதேர்வு 7ஆம் தேதி பிற்பகல் 3மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.
பயிற்சியில் சேரவிரும்புபவர்கள் மதுரை கிழக்கு யூனியன் அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். ஏற்கனவே இளைஞர்திறன் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் நேர்முகத்தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.