தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற ஜூலை 18-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறைச் செயலர் வி.கு. சுப்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் கல்வி ஆண்டில் பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), பிஏஎம்எஸ் (ஆயுர்வேதம்), பியுஎம்எஸ் (யுனானி), பிஎன்ஒய்எஸ் (இயற்கை - யோகா மருத்துவம்), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி) ஆகிய படிப்புகளில் அரசு கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஜூன் 26-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டை, மதுரை திருமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள மேற்சொன்ன இந்திய மருத்துவ முறை அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
விண்ணப்பங்களைப் பெற ஜூலை 18-ம் தேதி (பிற்பகல் 3 மணி) கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க ஜூலை 21-ம் தேதி (மாலை 5 மணி) கடைசி நாளாகும்.
இது தொடர்பான விவரங்களை சுகாதாரத் துறையின் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.