மருத்துவ கல்லூரிகளில் 400 பழைய மாணவர்களை மருத்துவ கலந்தாய்வில் அனுமதிக்க முடியாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
பிற தொழிற்படிப்புகளில் படித்து வரும் மாணவர்கள் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாநில தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது. இதனால் மற்ற தொழிற்படிப்புகளை படித்து வந்த மாணவர்கள் 1,500 பேர் இந்த ஆண்டு மருத்துவ கலந்தாய்விற்கு விண்ணப்பித்தார்கள். இதில் 400 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைத்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அந்த மனுவில் `பிற தொழிற்படிப்புகளில் படித்து வருபவர்களை மருத்துவ கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க அனுமதித்தது தவறு. இதனால் இந்த ஆண்டு தேர்வாகி மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இதற்காக விண்ணப்ப படிவத்தில் சேர்த்துள்ள 6-வது பிரிவை ரத்து செய்யவேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "முன்னதாக உள்ள வருடங்களில் ஏதாவது ஒரு தொழிற்படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் அதிலிருந்து விலகி இந்த ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் மற்றவர்களோடு சேர்ந்து கலந்தாய்வில் போட்டியிட அனுமதிக்க முடியாது'' என்று தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மாணவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் கொண்ட அமர்வு, தமிழக அரசின் முடிவிற்கு கண்டனம் தெரிவித்தது.
தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் விளக்கம் அளிக்க முயன்றும் அதனை ஏற்காத நீதிபதிகள், அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அரசு கல்லூரிகளில் சேருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அதை நீங்கள் எப்படி தடுக்க முடியும்?
அரசியல் சட்டத்தின் பிரிவுகளைக் கொண்டு மாநில அரசு குடிமக்களுக்கு உள்ள உரிமைகளைத் தடுக்கக் கூடாது. நீங்கள் கல்வியை கடுமையாக்கப் பார்க்கிறீர்கள் என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் விதித்த உத்தரவுக்கும் நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.
மேலும் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசு, மாநில தேர்வு ஆணையத்தின் செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குனரகம் ஆகியவற்றுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.