காலவரையறையின்றி விடுமுறை விடப்பட்ட காரணத்தால், அதைச் சரி செய்ய சிறப்பு வகுப்புகளை நடத்தி ஆசிரியர்கள் பாடங்களை கற்பித்து வருகின்றனர்.
பாடங்களையும், தேர்வுகளையும் உரிய காலத்துக்குள் முடிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததால், அனைத்து கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டன.
நிலைமை ஓரளவு சீரடைந்தவுடன், முதலில் தொழில்நுட்பக் கல்லூரிகளையும், தொடர்ந்து கலைக் கல்லூரிகளையும் தமிழக அரசு திறக்க உத்தரவிட்டது.
இதனால், திட்டமிட்டபடி பாடங்களை ஆசிரியர்களால் முடிக்க முடியவில்லை.
கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு வகுப்புகளை வைத்து ஆசிரியர்கள் பாடங்களை வேகமாக நடத்தி வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள சில துறைகளில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கி ழமைகளில் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒருவாரம் மட்டுமே கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இது மாணவர்களின் கல்வியை எவ்விதத்திலும் பாதிக்காது. சிறப்பு வகுப்புகள் எடுக்கும்படி எவ்வித உத்தரவும், கல்லூரிகளுக்கு பிறப்பிக்கப்பட வில்லை. கல்லூரி ஆசிரியர்களே இதில் கவனம் செலுத்துவர் என்று உயர்கல்வித் துறையினர் தெரிவித்தனர்
ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் செய்முறைத் தேர்வுகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. வரும் ஏப்ரல் மாதம் வரை சனிக்கிழமை வகுப்புகள் தொடரும் என்று அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.