தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவ, கால்நடை, பொறியியல் மற்றும் வேளாண் கல்லூரிகள் பிப்ரவரி 9-ந் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில், அப்பாவி தமிழர்களை காப்பாற்ற கோரியும், போர்நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வந்தனர். மேலும், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று மாணவர்களின் போராட்டம் நீடித்து கொண்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 2ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளையும், மாணவர் விடுதிகளையும், மறு உத்தரவு வரும் வரை மூட அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவம், பொறியியல், வேளாண் கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மற்ற கல்வி நிறுவனங்கள் மீண்டும் செயல்பட துவங்கும் நாள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.