சிறையில் இருந்து கொண்டே படிப்பை தொடரும் கைதிகளுக்கு கல்வியை இலவசமாக அளிக்க இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ) முடிவு செய்துள்ளது.
வரும் 17 ஆம் தேதி நடைபெறும் இப்பல்கலைக்கழகத்தின் வாரியக் கூட்டத்தில், இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும். அரசு அதிகாரிகளுடன் இணைத்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றியும் அந்த கூட்டத்தில் ஆராயப்படும் என்று இக்னோ வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறைத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது பற்றி இக்னோ தற்போது பரிசீலித்து வருகிறது. சிறைக் கைதிகளுக்கு கணினிப் பயிற்சி அளிக்கும் யோசனையையும் இப்பல்கலைக்கழகம் முன்வைத்திருப்பதாக, அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது சுமார் 940 கைதிகள் இளங்கலை, முதுகலை உள்ளிட்ட பல்வேறு வகைப் பாடங்களை, தொலைதூரக் கல்வி மூலம் பயின்று வருவதாக, சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறையில் உள்ள கைதிகள் மனம் திருந்தி குற்றச் செயல்களில் மீண்டும் ஈடுபடாமல் இருக்க, பல்வேறு வகையான வாய்ப்புகளையும், பயிற்சிகளையும் அரசு ஏற்படுத்தித் தருகிறது.
அந்த வகையில் கல்வி கற்கவும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தற்போது சிறைக்கைதிகளுக்கு கல்வியை இலவசமாக அளிக்க இக்னோ முன்வந்திருப்பது, அவர்கள் செம்மையுற மேலும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.