சென்னை: செவிலியர் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பில் சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 30 ஆக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் செவிலியர் பட்டப் படிப்பில் (பி.எஸ்சி. நர்சிங்) மாணவர்கள் சேர்வதற்கு குறைந்த பட்ச வயது 17 என்று ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது நிர்ணயிக்கப்படவில்லை.
செவிலியர் பட்டயப்படிப்பில் (டிப்ளமோ நர்சிங்) சேர்வதற்கு குறைந்த வயது 17 என்றும், அதிக பட்ச வயது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இவ்விரு படிப்புகளிலும் சேர்வதற்கு வயது வரம்பை 35 ஆக உயர்த்தவும், பள்ளி இறுதி தேர்வில் எந்த பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் செவிலியர் படிப்புப் பிரிவுகளில் சேரத்தகுதி பெற்றவர்கள் என்று அறிவிக்கக்கோரியும், அரசுக்கு கோரிக்கை வந்தது.
இதை அரசு கவனமாக ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் செவிலியர் பட்டப் படிப்பு மற்றும் செவிலியர் பட்டயப்படிப்பு ஆகிய 2 படிப்புகளுக்கும் சேர்வதற்கு குறைந்த பட்ச வயது 17 எனவும், அதிகபட்ச வயது 30 என்றும் நிர்ணயம் செய்து அரசு தற்போது ஆணையிட்டுள்ளது.
இதன்படி இவ்விரண்டு படிப்புகளுக்கும் மாணவர் மற்றும் மாணவிகள் 30 வயது வரை சேரலாம். ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் 35 வயது வரை சேரலாம்.
மேலும் செவிலியர் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு பிரிவுகளில், சேருவதற்கு பள்ளி மேல்நிலை தேர்வில் அறிவியல் பாடத்தை எடுத்தவர்கள் தகுதி பெற்றவர்கள்.
இதன்படி பிளஸ்- 2 தேர்வில் கணிதம், உயிரியியல், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகிய 3 பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட 2 செவிலியர் படிப்புகளில் சேரலாம்.
இந்த ஆணைகள் 2008-09 கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.