தஞ்சை: மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் வறுமை காரணமாக சேர முடியாத ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்க, தாவூத் பாட்சா கலை அறிவியல் கல்லூரி அறக்கட்டளை முன் வந்துள்ளது.
இதுதொடர்பாக தஞ்சை மாவட்டம், இராஜகிரி தாவூத் பாட்சா கலை அறிவியல் கல்லூரியின் தலைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா கூறுகையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இடம் கிடைத்தும் ஏழ்மை காரண்மாக சேர இயலாதவர்களுக்கு உதவும் நோக்கில் தங்களது அறக்கட்டளை இந்த உதவியை வழங்குகிறது என்றார்.
இதன்படி ஐந்தாண்டு மருத்துவப் படிப்பு முழுவதற்கும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை தங்களின் அறக்கட்டளையே வழங்கும் என்ற அவர், எனினும் பல்கலைக்கழகத் தேர்வில் ஏந்தவொரு பாடத்தில் சம்மந்தப்பட்ட மாணவர் தோல்வி அடைந்தால் இந்த உதவி ரத்து செய்யப்படும் என்றார்.
உதவித் தொகையை பெற விரும்பும் ஏழை மருத்துவ மாணவர்கள், 'தலைவர் மற்றும் செயலர், ஆர்.டி.பி. கலை, அறிவியல் கல்லூரி, பாபநாசம் - 614 205, தஞ்சை மாவட்டம்' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தாவுத் பாட்சா கூறினார்.