பெண் கடவுள்களின் நவராத்திரி விரதம்பெண் தெய்வங்கள் 9 இரவுகள் கடுமையான விரதம் இருந்து அசுரர்களை வதம் செய்தனர். இந்த 9 நாட்களிலும் இரவு நேரத்தில் துர்கையை வழிபடுகின்றனர். 9ம் நாள் தான் அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தெய்வங்களின் ஜோதிட முறைப்படி ஆண்டு தோறும் நடைபெறுகின்றது. நவராத்திரி பூஜை திருமணம் ஆனவர்களால் கொண்டாடபடுகிறது.
இந்த வழிபாட்டில் அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய மூவரின் முன்னிலையில் தான் 9 நாட்களிலும் விரதம் மேற்கொள்கின்றனர். விரதம் மேற்கொள்ளும் போது மனிதர்களின் தீய குணங்களான வெறுப்பு, பொறாமை, அறியாமை, பேராசை, போன்ற அனைத்து குணங்களையும் மனதில் இருந்து நீக்கி விட வேண்டும்.
இந்த விரதம் புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரைவழிபடவேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.
வீடுகளில் கொலுவைத்தல் நவராத்திரியின் விசேஷ அம்சமாகும். படிப்படியாக அமைக்கப்பட்ட விசேஷமான பீடங்களில் அல்லது மாடிப்படிகளில் விதவிதமான பொம்மைகள் வைத்து இக்கொலு அலங்கரிக்கப்படுகிறது.
சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர். நவராத்திரியின் ஒன்பதாம் நாளாகிய மஹாநவமியன்று சரஸ்வதி பூஜை அல்லது கலைமகள் விழா அல்லது ஆயுத பூஜை என்றும் சிறப்பாக கூறுவர்.
நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசிநூல் கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாளினுல் வரும்போது எண்ணெய் தேய்காது நீராடி அந்த விரதத்தையும் கைகொள்ளலாம்.